ஆழ் கடலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கான அனுமதியை திரும்ப பெறுக- வைகோ

Estimated read time 0 min read

ஆழ் கடலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெறுமாறு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகம் மற்றும் புதுச்சேரி நிலப்பகுதியை ஒட்டிய ஆழமற்ற கடல் பகுதிகளில் 30 ஆயிரம் சதுர கிமீ பரப்பிலும், ஆழமான கடல் பகுதியில் 95 ஆயிரம் சதுர கிமீ பரப்பிலும் ஹைட்ரோ கார்பன் இருப்பு உள்ளதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் கண்டறிந்துள்ளது.

தமிழக ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி ஒன்றிய அரசு வெளியிட்டிருந்தது.குறிப்பாக திறந்த வெளி அனுமதி அடிப்படையில் 10 ஆவது சுற்று ஏல அறிவிப்பில் இராமநாதபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை உள்ள கடல் பகுதியில் 9,990 சதுர அடி பரப்பில் எண்ணெய், எரிவாயு எடுக்க ஏலம் கோரப்பட்டுள்ளது.

இதனை ரிலையன்ஸ், வேதாந்தா, ஓ.என்.ஜி.சி., பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்கள் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. தொடர்ச்சியாக நடைபெற்று வரும் திறந்தவெளி அனுமதி கொள்கை அடிப்படையில் ஏல ஒப்பந்தத்தில் இந்த கடல் பகுதிகளை ஒன்றிய அரசு வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி., உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறது.

இது கடல்வாழ் உயிரினங்களையும் மீன்பிடிப் பொருளாதாரத்தையும் மீனவர்கள் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும்.மீன்வளம் பாதித்தால் இராமநாதபுரம், குமரி உள்ளிட்ட மாவட்ட மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சுற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்று சுற்றுச்சூழல் நிபுணர்களும் அறிக்கை அளித்துள்ளனர்.எனவே ஒன்றிய அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி., தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதியை மறு ஆய்வு செய்து திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author