சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள தைவான் நகரில் செயல்பட்டு வரும் ஒரு சிறிய உணவகம், வார்த்தைகள் இல்லாமலேயே மனிதநேயத்தையும் அன்பையும் வெளிப்படுத்தி உலக மக்களின் மனதை வென்று வருகிறது. காது கேளாத மற்றும் பேச முடியாத குறைபாடு கொண்ட யின் யிங் மற்றும் அவரது கணவர் ஃபெங் யாபின் ஆகியோர் இணைந்து நடத்தும் இந்த உணவகம், ‘சாவோஷான் காதுகேளாத சகோதரி’ என்று அழைக்கப்படுகிறது.
ஆவியில் வேகவைத்த சுவையான அரிசி ரோல்களுக்குப் பெயர் பெற்ற இந்த இடத்தில், உணவு வாங்க வருபவர்கள் பேச வேண்டிய அவசியமே இல்லை. சுவரில் ஒட்டப்பட்டிருக்கும் சீன சைகை மொழி விளக்கப்படங்கள் மூலமாகவோ, உணவுப் பட்டியலில் தங்களுக்குப் பிடித்த உணவைச் சுட்டிக்காட்டியோ அல்லது ஒரு சிறு புன்னகையோடு சைகை செய்தோ வாடிக்கையாளர்கள் எளிதாக ஆர்டர் செய்து வருகின்றனர்.
தங்கள் குறைபாடுகளைத் தடையாகப் பார்க்காமல், வாடிக்கையாளர்களுடன் எளிதில் தொடர்பு கொள்ளும் சூழலை இந்தத் தம்பதி உருவாக்கியுள்ள விதம் பலரையும் கவர்ந்துள்ளது. சமீபத்தில் சமூக வலைதளப் பிரபலம் ஒருவர் இந்த உணவகத்திற்குச் சென்றபோது, தன்னிடம் சாப்பிடப் பணம் இல்லை என்று தயக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
சிறிதும் யோசிக்காத யின் யிங் மற்றும் ஃபெங் யாபின் தம்பதியினர், அவருக்கு வயிறார இலவசமாக உணவு கொடுத்ததோடு, கவுண்டரிலிருந்து சில்லறைப் பணத்தையும் எடுத்து உதவி செய்துள்ளனர். இந்த அன்பான செயலால் மனம் நெகிழ்ந்து போன அந்தப் பிரபலம், இந்தச் சம்பவத்தைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்ததுடன், அந்தத் தம்பதியினரின் அழகான ஓவியம் ஒன்றையும் வரைந்து அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
சவுத் சைனா மார்னிங் போஸ்ட் ஊடகத்திலும் வெளியான இந்தச் செய்தி, உதவி செய்வதற்கும் அன்பைப் பகிர்வதற்கும் ஆடம்பரமான வார்த்தைகளோ பெரிய வசதிகளோ தேவையில்லை என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது.
கஷ்டப்படும் மனிதர்களுக்குத் தயக்கமின்றித் துணை நிற்கும் இந்தத் தம்பதியின் வாழ்வும் செயலும், இன்றைய அவசர உலகில் கருணையும் சகோதரத்துவமும் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதற்கான அழகான சான்றாக விளங்குகிறது.
