சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், ஜெர்மனி தலைமையமைச்சர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் உடன் உள்ளூர் நேரப்படி நவம்பர் 19ஆம் நாள் முற்பகல் ரியோ டி ஜெனிரோவில் சந்திப்பு நடத்தினார்.
இச்சந்திப்பின் போது ஷி ச்சின்பிங் கூறுகையில், கடந்த 6 திங்களில், பசுமையான வளர்ச்சி, தொடரவல்ல போக்குவரத்து, ஆப்பிரிக்காவுக்கான வேளாண் துறை ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில், இரு நாடுகளும் முக்கிய சாதனைகளைப் பெற்றுள்ளன என்றார்.
மேலும், செல்வாக்கு மிக்க நாடுகளான சீனாவும் ஜெர்மனியும் நீண்டகால மற்றும் நெடுநோக்கு பார்வையுடன், இரு நாட்டுப் பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவை வலுப்படுத்தி, பரஸ்பர நலன் தரும் ஒத்துழைப்புகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
ஜெர்மனியுடன் தத்தமது மைய நலன்களுக்கு மதிப்பு அளித்து, பரிமாற்றத்தை மேற்கொள்ள சீனா விரும்புவதாகத் தெரிவித்த ஷிச்சின்பிங், சீன நவீனமயமாக்கத்தை முன்னேற்றுவதற்கான முக்கியக் கூட்டாளியாக ஜெர்மனி திகழ்வதாகக் கூறினார். ஜெர்மன் தொழில் நிறுவனங்களுக்கு சீனா தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கும். எண்ணியல், நுண்ணறிவு, கார்பன் குறைப்பு ஆகிய துறைகளில் இரு தரப்பும் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, கூட்டு வெற்றிப் பெற வேண்டும். தவிரவும், ஐரோப்பாவுடன் ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, அறைகூவல்களைக் கூட்டாகச் சமாளித்து, சீன-ஐரோப்பிய உறவின் சீரான வளர்ச்சியை முன்னேற்ற சீனா பாடுபட்டு வருகிறது என்றும் ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.
ஸ்கோல்ஸ் கூறுகையில், சீனாவுடன் இணைந்து, பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவைத் தொடர்ந்து வளர்த்து, பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, கருத்து வேற்றுமைகளை உகந்த முறையில் தீர்த்து, பரஸ்பர நலன் தந்து கூட்டு வெற்றியை நனவாக்கி, உலகப் பொருளாதார அதிகரிப்புக்குப் பங்காற்ற ஜெர்மனி விரும்புவதாகத் தெரிவித்தார்.