பண்டிட் மதன் மோகன் மாளவியாவைப் போல எனக்கும் காசிக்கு சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்தது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறி பெருமிதம் அடைந்தார்.
பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் 162-வது பிறந்தநாளையொட்டி, ‘பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் சேகரிப்புப் படைப்புகள்’ 11 தொகுதிகளின் முதல் தொடரை வெளியிடும் நிகழ்ச்சி டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர், நிகழ்ச்சியில் முதல் தொடரை வெளியிட்டு பேசிய பிரதமர் மோடி, “இந்தியா மற்றும் இந்தியத்தின் மீது நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இன்று உத்வேகம் அளிக்கும் திருவிழாவாக உள்ளது. இன்று மகாமான மந்தன் மோகன் மாளவியாவின் பிறந்தநாள் மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாள். நாங்கள் அவருக்கு பாரத ரத்னா வழங்கியதை எங்கள் அரசாங்கத்தின் பாக்கியமாக கருதுகிறேன்.
என்னைப் பொறுத்தவரை, மகாமனா பண்டிட் மதன் மோகன் மாளவியா மற்றொரு காரணத்திற்காக மிகவும் சிறப்பு வாய்ந்தவர். அவரைப் போலவே, காசிக்கு சேவை செய்ய கடவுள் எனக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்துள்ளார். 2014-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட நான் வேட்புமனு தாக்கல் செய்தபோது, அதன் ஆதரவாளர்கள் மாளவியாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் எனது அதிர்ஷ்டம்.
மகாமானைப் போன்ற ஒரு ஆளுமை நூற்றாண்டுக்கு ஒருமுறை பிறக்கிறது. மகாமனா அவர் காலத்தின் சிறந்த அறிஞர். அவர் நவீன சிந்தனை மற்றும் சனாதன விழுமியங்களின் சங்கமம். மகாமனாவிற்கு பாரத ரத்னா விருதை வழங்கியது எனது அரசாங்கத்திற்கு பெரிய அதிர்ஷ்டமும் பெருமையும் ஆகும். தேசத்திற்கு விலைமதிப்பற்ற பங்களிப்பைச் செய்த பெருமக்களுக்கு நாடு கடன்பட்டிருக்கிறது.
பண்டிதரின் புத்தகத்தை வெளியிடும் பாக்கியம் கிடைத்தது பெருமையாக இருக்கிறது. பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் சேகரிக்கப்பட்ட படைப்புகள், மாளவியா ஜியின் மகத்தான வாழ்க்கையை வெளிச்சம் போட்டுக் காட்டும் முழுமையான இலக்கியம். மாளவியா ஜியின் எண்ணங்கள் மற்றும் இலட்சியங்களை நமது வருங்கால சந்ததியினருக்கு அறிமுகப்படுத்தும் சக்திவாய்ந்த ஊடகமாக இந்தப் புத்தகம் விளங்கும்.
உயர்கல்வியில் இந்திய மொழிகளை ஊக்குவிப்பதன் மூலம் அரசாங்கம் புதிய தொடக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பண்டிட் மாளவியாவுக்கு ‘தேசம் முதல்’ என்பது போல், தேசத்தைக் கட்டியெழுப்ப உறுதிபூண்ட பல நிறுவனங்களை நாங்கள் அமைத்து வருகிறோம். அவர் நாட்டிற்காக மிகப்பெரிய சக்திகளை எதிர்கொண்டார், மிகவும் கடினமான சூழலிலும், அவர் நாட்டிற்கான சாத்தியக்கூறுகளின் விதைகளை விதைத்தார்” என்றார்.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற நிறுவனர் மதன் மோகன் மாளவியா, நவீன இந்தியாவை உருவாக்கியவர்களில் முன்னணி இடத்தைப் பிடித்தவர். அவர் ஒரு சிறந்த அறிஞராகவும், சுதந்திரப் போராட்ட வீரராகவும் நினைவுகூரப்படுகிறார். அவர் மக்களிடையே தேசிய உணர்வை வளர்க்க பெரிதும் பாடுபட்டார்.