மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்ததாகவும், மறுதேர்வு நடத்த உத்தரவிடக்கோரியும் உச்சநீதிமன்றத்தில் சில மாணவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதைத்தொடர்ந்து நீட் தேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
அதில், நீட் தேர்வில், ஆள்மாறாட்டம், மோசடி, ஓ.எம்.ஆர். தாளை சேதப்படுத்துதல் போன்ற நேர்மையற்ற காரியங்களில் ஈடுபட்ட 63 மாணவர்கள் பிடிபட்டனர். அவர்கள் மீதான புகார்களை விசாரிக்க கல்வி மற்றும் தேர்வுகளில் நிபுணர்களான 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அக்குழுவின் பரிந்துரை அடிப்படையில், 12 மாணவர்கள் 3 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. 9 மாணவர்களுக்கு 2 ஆண்டுகளும், 2 மாணவர்களுக்கு தலா ஓராண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீதி 40 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் அளித்தது பற்றி விசாரிக்க மத்திய அரசு 4 பேர் கொண்ட குழு அமைத்துள்ளது என்று தெரிவித்துள்ளது. விசாரணையின் போது, நீட் நுழைவுத்தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1,563 மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை தகவல் தெரிவித்துள்ளது.