கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்திய விவகாரத்தில், கள்ளக்குறிச்சி சென்று நேரில் இரங்கலை தெரிவித்த அமைச்சர் எவ வேலு பேட்டி அளித்துள்ளார்.
விஷச்சாராயம் அருந்திய விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர், இந்நிலையில், இன்று காலை அவசர ஆலோசனை நடைபெற்றது.
அதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சமும், சிகிச்சை பெற்று வருபவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடு அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
மேலும், அமைச்சர்களையும் கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைத்தார். முதல்வரின் ஆலோசனைப்படி, கள்ளக்குறிச்சி சென்று விஷச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். அதனை தொடர்ந்து உயிரிழந்தோரின் உடலுக்கு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.
அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்து அமைச்சர் எவ வேலு பேசி இருந்தார். அங்கு அவர் கூறியதாவது, “கள்ளச்சாராய நிகழ்வை நாங்கள் நியாயப்படுத்த விரும்பவில்லை. இந்த சம்பவம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று தான். அதில் எவ்வித மாற்றுக்கருத்துமே இல்லை. கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரை காப்பாற்றுவதற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விஷச்சாராய விற்பனை தொடர்பாக சிபிசிஐடி விசாரணை தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிபிசிஐடி ஐஜி அன்பு தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், வரும் நாட்களில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது விஷச் சாராயம் குடித்து சிகிச்சையில் உள்ளவர்களின் உயிரை காப்பாற்றுவதற்கே முன்னுரிமை கொடுத்து வருகிறோம். விசாரணையில் கண்டறியப்படும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். சட்டத்திற்கு முன்பு அனைவரும் ஒன்று தான்.
கட்சிக்காரர். எம்.எல்.ஏக்கள் என யார் தவறு செய்து இருந்தாலும் முதலமைச்சர் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பார். உயிர்காக்கும் மருந்துகள் போதிய அளவில் உள்ளன.கள்ளக்குறிச்சி சம்பவத்தை முன்னுதாரணமாக வைத்துக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் கடும் சட்டங்களை முதலமைச்சர் ஏற்றவார்” என்று அமைச்சர் எவ வேலு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.