நடப்பு 2024-25 ஆம் நிதியாண்டுக்கான முழுமையான மத்திய பட்ஜெட் இதுவரை தாக்கல் செய்யவில்லை. இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்ததால் இடைக்கால பட்ஜெட் மட்டும் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது.
தற்போது இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதில் அரசு மும்முரம் காட்டிய நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் முக்கிய நிகழ்வான பட்ஜெட் தாக்கல் இன்று நடைபெறுகிறது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார். இது அவர் தாக்கல் செய்யும் ஏழாவது பட்ஜெட் ஆகும்.
இந்த பட்ஜெட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிகிறது. அதே சமயம் இந்த பட்ஜெட் மீது மக்களிடமும் பல்வேறு எதிர்பார்ப்புகள் உள்ளது. குறிப்பாக வருமான வரி சுமையை குறைக்க வேண்டும் என்பது நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும் விலைவாசியை கட்டுப்படுத்த, வேலைவாய்ப்பை அதிகரிக்க மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்க அறிவிப்புகள் இடம்பெற வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்த்து உள்ளனர். இன்று இது குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.