சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் நவம்பர் 20ஆம் நாள் பிற்பகல் பிரான்சு அரசுத் தலைவர் இம்மானுவேல் மக்ரோனுடன் தொலைபேசியில் உரையாடினார்.
ஷி ச்சின்பிங் கூறுகையில், பிரான்சு அரசுத் தலைவர் கடந்த ஏப்ரலில் சீனப் பயணம் மேற்கொண்ட பிறகு, இருநாடுகளிடையே பல்வேறு நிலை தொடர்புகள் வேகமாக மீட்சியடைந்து, பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்புகளும் முன்னேறி, பல சாதனைகள் பெறப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார். 2024ஆம் ஆண்டு இருநாட்டுத் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 60ஆவது ஆண்டு நிறைவு வரவேற்கப்படும் நிலையில், இருநாட்டுறவை புதிய நிலைக்கு முன்னெடுத்துச் செல்ல வேண்டும். பிரான்சுடன் இணைந்து உயர்நிலை தொடர்பை நிலைநிறுத்தி, கல்வி, பண்பாடு, அறிவியல் ஆய்வு உள்ளிட்ட துறைகளிலான ஒத்துழைப்புகளையும், இருநாட்டு மக்களின் நட்புப் பரிமாற்றத்தையும் முன்னேற்ற சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், சீனாவில் முதலீடு செய்ய பிரான்சு தொழில் நிறுவனங்களை வரவேற்பதோடு, பிரான்சில் முதலீடு செய்ய சீனத் தொழில் நிறுவனங்களுக்குப் பாகுபாடு இல்லாத சூழ்நிலையை வழங்க வேண்டும். ஐ.நா. உள்ளிட்ட பலதரப்பு அமைப்புகளில் பிரான்சுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா விரும்புகிறது. சீன-ஐரோப்பிய உறவின் வளர்ச்சியை மேம்படுத்துவதில் பிரான்சு ஆக்கப்பூர்வப் பங்காற்ற வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.
தவிரவும், காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதில் சீனாவும் பிரான்சும் சீராக ஒத்துழைத்து வருகின்றன. பிரான்சுடன் இணைந்து, துபாயில் நடைபெற உள்ள ஐ.நாவின் காலநிலை மாற்ற மாநாடு வெற்றி பெறுவதை ஊக்குவிக்க சீனா விரும்புகிறது என்றும் ஷி ச்சின்பிங் குறிப்பிட்டார்.
மக்ரோன் கூறுகையில், தற்போதைய நிலைமையில் இருநாடுகள் நெடுநோக்கு தொடர்பு மற்றும் ஒத்துழைப்பு தொடர்ந்து மேற்கொள்வதற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிவித்தார்.
பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல் பற்றி அவர்கள் இருவரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். பாலஸ்தீன-இஸ்ரேல் நிலைமை மோசமாவதைத் தவிர்ப்பது என்பது தற்போதைய அவசியம் என்று அவர்கள் உடன்பட்டனர். மேலும், பொது அக்கறை கொண்ட சர்வதேச மற்றும் பிரதேச விவகாரங்கள் குறித்து தொடர்புகளை நிலைநிறுத்தவும், உலகின் அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பேணிக்காப்பதற்குப் பங்காற்றவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.