ஆனந்தூர் பதிவுகள்

Estimated read time 1 min read

Web team

IMG-20240730-WA0047.jpg

ஆனந்தூர் பதிவுகள்

நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .செ .செய்யது அபுதாகிர் மின் அஞ்சல் reporterabu@yahoo.co.in செல் 9840931476

விமர்சனம் கவிஞர் இரா .இரவி

நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி . செ.செய்யது அபுதாகிர் மதுரை நாளிதழில்நிருபராக பணி புரிந்து வருபவர் .குடத்து விளக்காக
இருந்த எழுத்தாளர்கள்
,கவிஞர்கள் படைப்பாளிகள் பலரை குன்றத்து விளக்காக ஒளிர்ந்திட வைத்தவர்.
கவிஞர் ,எழுத்தாளர் ,நல்ல பண்பாளர் நேர்மையான மனிதர் .அவர் தான்
பிறந்த ஊரான ஆனந்தூர் பற்றி அலசி ஆராய்ந்து முனைவர் பட்ட ஆய்வு ஏடு
போல நூலை வழங்கி உள்ளார். நூலைப் படிக்கும் அனைவருக்கும் ஆனந்தூர் சென்று அவசியம் பார்க்க வேண்டும்.என்ற ஆவலைத் தூண்டும் வண்ணம்

மிகச் சிறப்பாக எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .

நூலின் அட்டைப்படத்தில் பச்சைப் பசேலென ஆனந்தூர் புகைப்படம் உள்ளது
.முப்போகம் விளைந்த பூமியின் வரலாறு இலக்கியத் தகவல்களுடன் ,கல்வெட்டு
ஆதரங்களுடன் ,மண் வாசனையோடு தமிழர்களின் கலை ,பண்பாடு ,நாகரீகம் இன்றும்
வாழும் பூமியாகத் திகழும் ஆனந்தூர் பற்றிய தகவல்கள் படிக்க மிகவும் சுவையாக
உள்ளது .இந்த ஊர் பற்றி முழுமையான தகவல்களுடன் வந்து நூல் இதுவாகத் தான்
இருக்கும் .பண்பாட்டின் பிறப்பிடமாக சமய ஒற்றுமைக்கு உதாரணமாக விளங்கும்
ஊர் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பாக இருந்தது .இவ்வளவு சிறப்பு மிக்க
ஊர்பற்றி இவ்வளவு நாளாக தெரியாமல் இருந்தோமே என்று உண்மையில்
வருத்தப்பட்டேன் .

இந்த உலகில் பிறந்தமனிதர்கள் அனைவருக்கும் பிறந்த மண் பாசம் உண்டு .பிறந்த மண் பாசம் இல்லாதவர்கள் மனிதர்களே அன்று .எனக்கு நான் பிறந்த மதுரை மண் மீது அளவு கடந்த பாசம்,
பற்று உண்டு .மிகப் பெரிய நகரங்களுக்கு சென்றாலும் எப்போது ? மதுரை
திரும்புவோம் .என்ற எண்ணமே எனக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் .சொர்க்கமே
என்றாலும் பிறந்த மண்ணிற்கு ஈடாகாது .என்பது உண்மை அனுபவித்தவர்களுக்கு
தெரியும் . நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .செ .செய்யது அபுதாகிர் பிறந்த
மண் பாசத்துடன் படைத்துள்ள அற்புதமான நூல் இது .இந்த நூல் படிக்கும்
ஒவ்வொரு வாசகருக்கும் நாம் பிறந்த ஊருக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்ற
எண்ணத்தை விதைத்து வெற்றி பெறுகின்றார் .நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .செ.செய்யது அபுதாகிர்.

தான் பிறந்த ஊருக்கு இந்த நூல்எனும் மகுடம் சூட்டி மகிழ்ந்துள்ளார் .புலம் பெயர்ந்த அனைவருக்கும் , அவரவர் பிறந்த புலத்தை நினைவுப்படுத்துகின்றது .இந்த நூல் படித்தபோது நான் எழுதிய என் ஹைக்கூ நினைவிற்கு வந்தது .

வீடு மாறியபோது
உணர்ந்தேன்
புலம் பெயர்ந்தோர் வலி

ஆனந்தூர் பதிவுகள் அனைத்தும் ஆவணப்பதிவுகள் ஆனந்தம் அங்கு நிலையாக
குடி கொண்டு இருப்பதால் வந்தால் காரணப்பெயரோ ? என்று எண்ணத் தோன்றியது .ஆனந்தூரை
சுற்றுலாத் தலமாக்கி வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மண் வாசம் வீசும் இந்த
ஊரை காண்பிக்கலாம் .நம் பண்பாட்டை பறைசாற்றும் கிராமமாக உள்ளது .நண்பர்
செய்யது அபுதாகிர் விடுமுறை கிடைக்கும் போது ,பண்டிகைகளின் போது ,வாய்ப்பு நேரும் போதெல்லாம் ஆனந்தூர்
சென்று விடுவார் .அடிக்கடி அங்கு சென்று விடுகிறாரே அந்த கிராமத்தில்
அப்படி என்னதான் இருக்குமோ ?என்று நான் நினைத்தது உண்டு .இந்த நூல்
எழுதுவதற்காகத்தான் சென்று உள்ளார் .சென்று வென்று உள்ளார் .

பலரால் அறியப்படாத ஊரை இன்று உலகம் அறியும் வண்ணம், ஆவணப்படுத்தி
உள்ளார் .தமிழர் கலை ,பண்பாடு ,நாகரீகம் ,ஒழுக்கம், தமிழ் மொழிப்பற்று
,வரவேற்கும் பண்பு என அனைத்தும் என்றும் உயிர்ப்புடன் இருக்கும் ஊரை படம்
பிடித்து படங்களுடன் விளக்கி உள்ளார்.
நூல் ஆசிரியர் செய்யது அபுதாகிர் அவர்களின் கடின உழைப்பை உணர முடிகின்றது .

ஆனந்தூர் பெயர் விளக்கம் ஆராய்ச்சியுடன் நூல் தொடங்குகின்றது .இல்லை என்ற சொல்லைப் பயன்படுத்தாத மக்கள் ஆனந்தூர்
மக்கள் என்பதை படித்தபோது மகாகவி பாரதியார் தன் மனைவி செல்லமாளிடம் அரிசி
இல்லை என்று சொல்லாதே ! அகரம் இகரம் என்று சொன்னால்போதும் நான்
புரிந்துகொள்வேன் என்று சொன்ன நிகழ்வு என் நினைவிற்கு வந்தது .

இந்த ஊரில் அதிக அளவில் முகமதியர்கள் வாழ்ந்தாலும் இந்து ,கிறித்தவர் என அனைத்து மதத்தினரும் மிக ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள் எனபதற்கு
எடுத்துக்காட்டாக வடக்கே ஒரு பள்ளிவாசல் ,தெற்கே ஒரு
பள்ளிவாசல்,கிழக்கில் திருக்காம வள்ளி திருக்கோயில் மேற்கில்
கிறித்தவர்கள் தேவாலயம் உள்ளது .புகைப்படங்களும் நூலில் உள்ளது .கட்டிடக் கலையை பறை சாற்றும் விதமாக உள்ளது.

ஆனந்தூர் பற்றிய தகவல் சுரங்கமாக நூல் உள்ளது.அகழ்வாய்வு
,எல்லைக்கல்,கோயில் மாடு இப்படி பல துணுக்கு செய்திகளும் நூலில் உள்ளது. இந்த ஊருக்கு வருகை புரிந்த தலைவர்கள் ,நடிகர்கள் ஆகியோரின்
பெயர்ப்பட்டியல் உள்ளது .
தந்தை பெயரின் முன் எழுத்தை ஆங்கிலத்தில்தான் பலர் எழுதி
வருகிறோம் .மதுரை மைய நூலகத்திற்கு வருகை தரும் வாசகர்கள் கையொப்பம் இடும்
பதிவேடு பார்த்தேன் .அதில் பெரும்பாலோர் ஆங்கிலத்தில்தான் எழுதி இருந்தனர்
.ஒரு சிலர் தமிழில் எழுதி இருந்தனர்.ஆனால் அவர்களில் பலர் தந்தை முன்
எழுத்தை ஆங்கிலத்தில்தான் எழுதி இருந்தனர்.இதைப் பார்த்தபோது வேதனையாக
இருந்தது .எந்த ஒரு ஆங்கிலேயராவது அவர் தந்தையின் எழுத்தை தமிழில் எழுதி
பிறகு ஆங்கிலத்தில் எழுதி கையொப்பம் போடுவார்களா ? என்று எண்ணிப் பார்க்க
வேண்டும். ஆனந்தூர் மக்கள் அனைவரும் தந்தை ,தாத்தா, பாட்டன் ஆகியோரின்
முன் எழுத்தை அழகு தமிழில் மூன்று முன் எழுத்துக்களாக இன்றும் பயன்
படுத்தி வரும் செய்தி படித்து மகிழ்ந்தேன் .இந்த நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .செ .செய்யது அபுதாகிர் அவர்களும் மூன்று முன் எழுத்துக்களை பயன்படுத்தி உள்ளார் .

ஆனந்தூரில் நடந்த விடுதலைப் போராட்டம் ,1965 களில் முகமதுஉசேன் என்ற பெரும் கவிஞர் பற்றியும் ,அவர் ஆனந்தூர் பற்றி எழுதிய கவிதையும் நூலில் உள்ளது.சுழற்சி பஞ்சாயத்து ,நெல் மேச்சுகள் (சேந்தி )புகைப்படங்கள் ,கைவினைப் பொருட்கள் ,பாட்டி வைத்து இருக்கும் சுருக்குப்பை வரை பதிவு செய்துள்ளார் .

காணமல் போன விளையாட்டு ,தற்காப்புக் கலைகள் ,பள்ளிவாசல்கள் வரலாறு
,புதைந்து மீண்ட கிணறு ,நூலகம் ,திரைஅரங்கு ,மரம்,
தெருக்கலைஞர்கள்,தொலைபேசி நிலையம் ,கோயில்கள் ,கல்வெட்டுக்கள் ,திண்ணைக்கூடு
,பழங்கால நகைகள் ,உணவு வகைகள் இப்படி அனைத்தையும் ஆவணப்படுத்தி வெற்றிப்
பெற்றுள்ளார் .உலகின் முதல் மொழியான தமிழ் மொழி உள்ளவரை ஆனந்தூர் நிலைத்து
நின்று தமிழர்களின் பெருமையை ,பண்பாட்டை உலகிற்கு உணர்த்தும் .நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .செ. .செய்யது அபுதாகிர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்கள் .

Please follow and like us:

You May Also Like

More From Author