தமிழர்க்கு ஒரு தலைவர்

Estimated read time 1 min read

Web team

IMG-20240910-WA0033.jpg

தமிழர்க்கு ஒருவர் தலைவர் !

கவிதை நூல் !

நூல் ஆசிரியர் :

முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியன் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

வெளியீடு : புரட்சிக்கவிஞர் மன்றம், 75, வடக்கு மாசி வீதி, மதுரை-625 001. பக்கம் : 36, விலை : ரூ. 30.

******

நூலாசிரியர் முனைவர் பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்கள் தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் இலக்கியத்துறையின் தலைவராகப் பணியாற்றியவர், பண்பாளர், பகுத்தறிவாளர், பணிநிறைவிற்குப் பின் தந்தை பெரியார் பற்றி பேசியும், எழுதியும் வருகிறார்கள். புரட்சிக்கவிஞர் மன்றத்தின் தலைவர் பி. வரதராசனார் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பகுத்தறிவுப் பகல்வன் தந்தை பெரியார் பற்றிய கவிதைகளை வடித்துத் தந்துள்ளார், பாராட்டுக்கள்.

இந்நூலிற்கு திராவிடர் கழகத்தின் தலைவர் விடுதலை ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் முத்தாய்ப்பாக அணிந்துரை வழங்கி உள்ளார்கள். நூலாசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்கள், பகுத்தறிவாளர் என்ற காரணத்தால் பெரியாரைப் பற்றி நன்கு அறிந்து ஆராய்ந்து, தெரிந்து, உணர்ந்து, வியந்து கவிதைகள் வடித்துள்ளார். இந்நூல் வெளியீட்டு விழாவில் மேனாள் அமைச்சர் வேங்கடபதி அவர்கள் கவிதைகள் குறித்து பாராட்டி மகிழ்ந்தார்.

10 தலைப்புகளில் கவிதைகள் வடித்துள்ளார். நூலின் தலைப்பே ‘தமிழர்க்கு ஒருவர் தலைவர்’. ஆம், தமிழர்க்கு தந்தை பெரியார் ஒருவர் மட்டுமே தலைவர் என்பதை உணர்த்துவதாக உள்ளது. அது. உண்மையிலும் உண்மை.

தன்மானப் பெருஞ்சுடர், நீதிமன்றக் கூண்டேறி நிகழ்த்திய பேருரை, வைக்கம் வென்ற வரலாறு, அவர் வழியில், உரிமை வென்றவர், தமிழர்க்கொரு தலைவர், சீர்திருத்தப் பெரியார், திராவிடத் தந்தை, வாழ்க்கை முழுவதும் போராளி, அவர் ஒரு பல்கலைக்கழகம். இப்படி 10 தலைப்புகளும் சிந்திக்க வைக்கின்றன.

தந்தை பெரியார் அவருக்கு இணை பெரியார் மட்டுமே. அவர் போல இறுதிமூச்சு வரை உடல் நலம் குன்றியபோதும் ஓய்வின்றி உழைத்து தமிழருக்கு மானமும் அறிவும் கற்பித்த ஆசான் பற்றிய கவிதைகள் சிறப்பு. சிறுதுளிகள் உங்கள் பார்வைக்கு.

எமையாளும் பதவிகளில் அவரிருந்தால் நாட்டில்
என்றென்றும் அறநெறியே நிலைக்காது! சான்றாய்ச்
சுமைசுமையாய் அவரிழைத்த தீமைகளை இங்குச்
சொல்லுகிறேன் கேட்டபின்பு சிந்திப்பீர் என்பேன்!

இன்றைய அரசியல்வாதிகள் போல. தண்டனைக்குப் பயந்து. செய்ததை நான் செய்யவில்லை என்று சொல்பவர் அல்ல பெரியார். நான் செய்தேன், என் பார்வையில் அது குற்றமன்று. குற்றமென்று நீங்கள் கருதினால் அதற்குரிய தண்டனை வழங்குங்கள், கர்ச்சனை செய்த சிங்கம் பெரியார்.

வைக்கம் வென்ற வரலாறு!

பார்ப்பனர்கள் ஒரு வேள்வி நடத்தினார்கள் ; வந்த
பகைவனிவன் ஈவெரா அவனஞ்சிச் சாக
சார்ந்தெகும் எரி வளர்ப்போம் நெய்யூற்றிப் பன்னாள்
சத்துருவை சங்காரம் செய்திடுவோ மென்றே
சேர்ந்தங்கே முழங்கினார்கள் மந்திரங்கள்! அக்கால்
சிதைமூட்டி உருச்செய்தே எரித்தார்கள் ; ஆனால்
நேர்ந்ததென்ன? வேள்வியது முடியுமுன்னே மன்னர்
நீத்தாரே இவ்வுலகை ; நிகழ்ந்தது தான் இஃதே!

வைக்கம் என்ற ஊரில் தெருவில் நாய், மாடு, ஆடு, பன்றி செல்லலாம். ஆனால் மனிதன் செல்லக்கூடாது, தீட்டு என்று சொல்லி ஏமாற்றி வந்ததைத் தடுக்க பெரியார் வைக்கம் சென்று போராடினார். பெரியார் சாகவேண்டுமென யாகம் நடத்தினார்கள். பெரியார் சாகவில்லை. மன்னர் இறந்தார். மூட நம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் பெரியார். வைக்கம் வீரர் என்ற பட்டம் சும்மா தரவில்லை. கடுங்காவல் சிறை தண்டனைபெற்றுப் போராடி மனிதர் நடக்க உரிமை பெற்றுத் தந்தவர் பெரியார்.

அவர் வழியில்!

சிந்திக்க வேண்டும் நாம் சிந்திப்பின் நம்மறிவு
வந்துயர் மாய்க்கும் வலிவேற்றும் – இந்தவுரை
தந்தையவர் சொன்னதால் தாழ்ந்தா ரெழுந்தார் காண்
சந்தமிழ் நாட்டி லறி!

மனிதனுக்கு உள்ள ஆறாவது அறிவான பகுத்தறிவைப் பயன்படுத்தாது மாக்கள் போலவே இருந்திட்ட மக்களுக்க்கு பகுத்தறிவை அறிமுகம் செய்து வைத்தவர் பெரியார். நான் சொல்வதற்காக ஏற்காதே! உன் அறிவுக்கு சரியென்று பட்டால் மட்டும் ஏற்றுக்கொள் என்று உரைத்தவர் பெரியார்.

மாந்தரில் மேலவர் யாருமில்லை – வாடும்
மனிதரில் கீழவர் யாருமிலை – சாதி
ஏந்திடும் துயரினை நீக்கிடவே – சீறி
எழுந்தனர் இங்கொரு பெரியாரே!

முகத்தில் பிறந்தவன் உயரந்தோன் ; காலில் பிறந்தவன் தாழ்ந்தோன் என்று வாய்க்கு வந்தபடி அறிவுக்கு ஒவ்வாத கற்பனை கதைகள் சொல்லி சாதிக்கு சப்பைக்கட்டு கட்டியவர்களுக்கு சம்மட்டி அடி அடித்து, மனிதர்கள் யாவரும் சமம். உயர்ந்தவர், தாழ்ந்தவர் மனிதர்களில் இல்லை என்று ஓங்கி உரைத்தவர் பெரியார்.

வாழ்க்கை முழுவதும் போராளி!

பட்டும் பகட்டுமெனப் / பார்க்க பளபளக்கக்
கட்டும் சரிகைப்பூ / கண்ணைக் கவர்கின்ற
ஆலைத் துணியெரித்து / அழுத்தக் கதரணிந்தார்!
முரட்டுக் கதர்த் துணியை / வலிய தோள் சுமந்து
தெருவில் விலை பகர்ந்தார் / செல்வ குடிப்பிறந்த
சீமான் பெரியாரே!

மிகப்பெரிய வணிகர், பணக்காரர் வீட்டில் பிறந்த பெரியார். காந்தியடிகள் சொன்னதற்காக பட்டாடைகளை எரித்து கதராடை அணிந்து கதராடை சுமந்து சென்று விற்ற உணர்வை கவிதை வரிகளில் காட்சிப்படுத்தியது சிறப்பு.

அவர் ஒரு பல்கலைக்கழகம்!

மதமோர் மண்ணாங்கட்டி யதனை
மிதித்தெறி! தெருப்புழுதி யென்றே ஆக்கு!
சாதியேது வெங்கா யமதனில்
மீதியேது தொலை உரித்துணர்!

மதம் மண்ணாங்கட்டி என்று உரைத்த வீரர் தீரர் பெரியார். இன்றும் உலகம் முழுவதும் மதங்களின் பெயரால் தான் வன்முறைகளும் படுகொலைகளும் நிகழ்ந்து வருகின்றன. பெரியார் அன்றே சொன்னார். கடவுளை மற ! மனிதனை நினை! மதவெறி மாய்ப்போம் !மனிதனைக் காப்போம்!

இந்த உலகில் மனிதகுலம் இருக்கும் வரை மறக்க முடியாத மறக்கக் கூடாத மாபெரும் மாமனிதர் தன்னை உருக்கி மக்களுக்கு அறிவொளி தந்த மெழுகு எதையும் ஏன்? எதற்கு? எப்படி? எதனால் என்று கேட்கும் துணிவை வழங்கிய பகுத்தறிவுப் பகலவன் பெரியார் புகழ்பாடும் இந்நூல் தமிழர்களின் இல்லங்களில் இருக்கவேண்டிய அற்புத நூல்.

.

Please follow and like us:

You May Also Like

More From Author