கச்சத்தீவு இலங்கைக்கு தரப்பட்டதால் மீனவர்கள் கொலை செய்யப்படுகின்றனர் என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை ஐ.ஐ.டி-யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, “மொழியைப் பயன்படுத்தி பிரிவினை உண்டாக்குகின்றனர். கச்சத்தீவை தாரை வார்த்ததால் நமது மீனவர்கள் இலங்கை நாட்டு ராணுவத்தால் சுடப்படுகின்றனர். நமது மீனவர்கள் கொல்லப்படுவதற்கும் மீனவர்களின் படகுகள் மூழ்கடிக்கப்படுவதற்கும் கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டதே காரணம். இருப்பிடம், மொழி ஆகியவற்றின் மூலம் மக்கள் மனதில் பிரிவினையை உண்டாக்குகின்றனர். திராவிட சித்தாந்தம் நாட்டைத் துண்டாட விரும்புகிறது. இந்தியாவை மதச்சார்பற்ற நாடாக திராவிட சித்தாந்தம் கருதவில்லை.
1947ல் ஏற்பட்ட பிரிவினை இன்னும் முடியவில்லை. தற்போதும் நடக்கிறது. இருப்பிடம், மொழி ஆகியவற்றின் மூலம் மக்கள் மனதில் பிரிவினையை உண்டாக்குகின்றனர். பல சிந்தாந்தங்கள் பிரிவினையை ஆதரித்தது.
அதில் திராவிட சிந்தாந்தமும் ஒன்று. முன்பு இந்தியாவை ஆண்ட அரசு நமது நிலத்தை ஆக்கிரமித்த அண்டை நாடுகளுக்கு தாரைவார்த்தனர்.
1960 போரில் இந்தியா இடத்தை சீனாவிடம் தாரைவார்த்தது. அதேபோல் கச்சத்தீவையும் தாரைவார்த்தனர். இதனால் நமது மீனவர்கள் இன்று அண்டை நாட்டு ராணுவத்தால் சுடப்படுகின்றனர்” என்றார்.