சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை விரைந்து நடத்த வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு உயர்க்கல்வித்துறை கடிதம் எழுதியுள்ளது.
இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான சென்னை பல்கலைக்கழகம் 166 ஆண்டுகளை கடந்து இயங்கி வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மாணவர்கள், 3000க்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரி மாணவர்கள் என 6000க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் 6 வளாகங்களில், 280 க்கு மேற்பட்ட பாடப்பிரிவுகளில் சென்னை பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை மற்றும் அதனை ஒட்டி உள்ள மாவட்டங்களில் சுமார் 110 க்கு மேற்பட்ட கலை அறிவியல் கல்லூரியில் இணைவு பெற்று செயல்படுகின்றன.
இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகத்திற்கு பட்டமளிப்பு விழாவை அறிவிக்கக்கூடிய அதிகாரம் கொண்ட துணைவேந்தர் பணியிடம் காலியாக இருப்பதால் கடந்த ஓராண்டாக சென்னை பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் முற்றிலுமாக முடங்கியுள்ளது. இதனால் பட்டமளிப்பு விழா நடத்தாமல் பல்கலைக்கழகத்தின் கீழ் கடந்த கல்வியாண்டில் படித்து முடித்து சுமார் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டம் பெற முடியாத நிலையில் இருக்கின்றனர். சென்னை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தன்னாட்சிக் கல்லூரிகள், பிற பல்கலைக்கழகங்களின் கீழ் செயல்படும் கல்லூரிகளிலும் பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை. இதேபோல் சென்னை பல்கலைக்கழகம் உட்பட 5 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி இன்னும் நிரப்பப்படவில்லை. இந்நிலையில் சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை விரைந்து நடத்த வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு உயர்க்கல்வித்துறை கடிதம் எழுதியுள்ளது. அக்கடிதத்தில் கடந்த 2 ஆண்டுகளாக சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெறாமல் உள்ளது. கல்வியியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவும் நடைபெறாமல் உள்ளதால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பட்டங்களை பெற முடியாமல் உயர்க்கல்வி சேர முடியாமல் தவித்துவருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.