தென்காசி குற்றால பிரதான அருவியில் இருந்து திடீரென பாறைகள், கற்கள் விழுந்ததில் 5 பேர் காயமடைந்தனர்.
குற்றாலத்தில் இந்த ஆண்டு சீதோஷ்ன நிலை சரியாக இல்லாத போதிலும் அவ்வப்போது ஓரிரு நாட்கள் மழை பெய்ததால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக மழை இல்லாதபோதும் அருவிகளில் தண்ணீர் சீராக விழுந்து கொண்டிருக்கிறது. இதனால் அருவியில் நீராட ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
மெயின் அருவி,ஐந்தருவி பழைய குற்றால அருவிகளுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து ஆனந்தமாக நீராடினர்.
இந்நிலையில் திடீரென தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் பாறைகள், கற்கள் உருண்டு விழுந்ததில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
படுகாயம் அடைந்த சுற்றுலா பயணிகள் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கற்கள் விழுந்ததால் குற்றால அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலே இருக்கும் பாறைகள் விழும் நிலையில் இருப்பதால் தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.