இளநிலை கால்நடை மருத்துவப் படிப்பில், சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான நேரடி கலந்தாய்வு, சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் தொடங்கியது.
இளநிலை கால்நடை மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 3ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி நிறைவடைந்தது. இளநிலை கால்நடை மருத்துவப் படிப்பிற்கு மொத்தம் 17 ஆயிரத்து 497 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த 7ஆம் தேதி வெளியிடப்பட்டது. BVSc & AH படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலில் 15 பேர் கட் ஆஃப் மதிப்பெண் 200க்கு 200க்கு பெற்று முன்னிலை பெற்றனர்.
7 புள்ளி 5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு BVSc & AH படிப்பில் 45 இடங்கள், உணவுத் தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்கள், பால்வளத் தொழில்நுட்பப் படிப்பில் 2 இடங்கள், கோழியின தொழில்நுட்பப் படிப்பில் 3 இடங்கள் என மொத்தம் 53 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான நேரடி கலந்தாய்வு, சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில்
இன்று தொடங்கியது.
முதல்நாளில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகள், விளையாட்டு வீரா்கள் ஆகிய சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. 7 புள்ளி 5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கலந்தாய்வு நாளை நடைபெறவுள்ளது.
பி.டெக். படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு நாளை மறுநாள் நடைபெறுகிறது. இடங்கள் ஒதுக்கீடு மற்றும் அதற்கான கடிதம் செப்டம்பர் 11ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும்.