இஸ்ரேலை மிரட்டிய ஈரான் : நவீன ரேடாரால் கண்டுபிடிக்க முடியாத Fattah-2 ஏவுகணை – சிறப்பு கட்டுரை!

Estimated read time 1 min read

மத்திய கிழக்கில் இஸ்ரேல் தாக்க முடியாத இடம் எதுவும் இல்லை என்று நெதன்யாகு, ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த மறுநாளே, இஸ்ரேல் மீது அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளது ஈரான். சரமாரியாக, 180க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி இஸ்ரேலை தாக்கிய ஈரான், இந்த தாக்குதலுக்குப் பயன்படுத்திய Fattah-2 ஹைப்பர்சோனிக் ஏவுகணையைப் பற்றி பார்க்கலாம்.

Center for Strategic and International Studies நிறுவனம், 2021ம் ஆண்டு, ஏவுகணை அச்சுறுத்தல் என்று ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில்,ஈரானிடம் ஏற்கெனவே, ஆயிரக்கணக்கான பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகள் உள்ளன என்று கூறப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து, அமெரிக்க விமானப்படை ஜெனரல் கென்னத் மெக்கென்சி 2023 இல் ஈரானிடம் “3,000 க்கும் மேற்பட்ட” பாலிஸ்டிக் ஏவுகணைகள் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தான்,இஸ்ரேல் மீதான தாக்குதலில், முதன்முறையாக Fattah-2 ஹைப்பர்சோனிக் ஏவுகணையைப் பயன்படுத்தி இருக்கிறது ஈரான். நிர்ணயித்த இலக்குகளில் 90 சதவீத இலக்குகளை Fattah-2 ஏவுகணைகள் தாக்கியதாக ஈரான் தெரிவித்துள்ளது.

1,500 கிலோமீட்டர் தூரம் வரை செல்லக்கூடியதாகவும், தன் இலக்கைத் தாக்கும் முன் வினாடிக்கு 5.1 கிலோ மீட்டர் வேகத்தை எட்டக் கூடியதாகவும் இந்த ஏவுகணை உள்ளது. இந்த ஏவுகணையில், ஹைப்பர்சோனிக் க்ளைடு வெஹிக்கிள் (HGV) பொருத்தப்பட்டுள்ளது. ஹைப்பர்சோனிக் ஏவுகணை தோராயமாக மணிக்கு 6,100 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாகும்.

எதிரிகளின் தாக்குதலைத் தவிர்ப்பதற்காக பறக்கும் போதே, தனது பாதையை மாற்றி சென்று குறிப்பிட்ட இலக்கைத் தாக்கும் திறன் கொண்டதாகும். மேம்பட்ட திசைக் கட்டுப்பாட்டுக்காக நகரக்கூடிய முனையுடன் கூடிய கோள வடிவிலான திட எரிபொருள் இயந்திரத்தை இந்த Fattah-2 பயன்படுத்துகிறது.

இந்த ஏவுகணையில் உள்ள, ரீ-என்ட்ரி வாகனம் வளிமண்டலத்தில் முடுக்கம் மற்றும் சூழ்ச்சிக்கு ஹைட்ராசைன் எரிபொருளைக் கொண்டுள்ளது. Fattah-2 ஏவுகணையைப் பூமியின் வளிமண்டலத்திற்கு வெளியேயும் செல்ல வைக்க முடியும். மேலும், ஏரோடைனமிக் கட்டுப்பாட்டின் மூலம் Fattah-2 ஏவுகணையை மீண்டும் வளிமண்டலத்திற்குள் திசைதிருப்பி செலுத்த முடியும்.

நவீன ரேடார் அமைப்புகளால் கூட Fattah-2 ஏவுகணையைக் கண்டறிய முடியாத, இந்த Fattah-2 ஏவுகணையை அதிநவீன பாதுகாப்புத் தொழில்நுட்பங்களாலும் இடைமறிப்பது சவாலான காரியமாகும் என்கிறார்கள்.

இதுவரை, ரஷ்யாவும் சீனாவும் அதிக எண்ணிக்கையில் பலவகையான ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை வைத்துள்ளன. இதில், ரஷ்யா மட்டுமே அவற்றைப் போரில் பயன்படுத்தியதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவைப் பொறுத்தவரை, இன்னமும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை நிலையில் தான் உள்ளது.

இந்த சூழலில் தான் ஈரான்,Fattah-2 ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை போரில் பயன்படுத்தியுள்ளது.
ஈரான் அனுப்பிய 180க்கும் மேற்பட்ட ஏவுகணைகளில், பெரும்பாலானவற்றை இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஜோர்டான் நாடுகளால் இயக்கப்படும் ஏவுகணை எதிர்ப்பு மற்றும் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளால் இடைமறித்து அழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author