Web team
புத்தகம் போற்றுதும் விமர்சனம்
நூல் : புத்தகம் போற்றுதும்
ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதுரை.
எழுத்தாக்கம்
கவிஞர் ச. கோபிநாத்
27/12 அம்மாப்பேட்டை முதன்மை சாலை
பாவடி பெண்கள் பள்ளி எதிரில்
சேலம் 636001
பேச 9790231240
மின்னஞ்சல் kavignarsagopinath@gmail.com
வலைப்பூ www.kavivanam.blogspot.com
பக்கம் : 224 பக்கங்கள்
விலை : ரூ. 150 /-
வெளியீடு : வானதி பதிப்பகம், 12, தீனதயாளு தெரு, தி.நகர் சென்னை – 17
தொலைபேசி 044-24342810. 044-24310769. மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com பக்கம் 224 விலை ரூபாய் 150.
புத்தகங்கள் அறிவின் திறவுகோல் மட்டுமல்ல, நம் ஆன்மாவை பண்படுத்தும் அற்புத மருந்து. வண்ண மலர்கள் எங்கும் நிறைந்து பூத்துக் குலுங்கும் பூந்தோட்டம் போலவே, நல்லெண்ண மலர்கள் எங்கும் நிறைய சுடர்விடும் அறிவுத்தோட்டங்களாக திகழ்கின்றன புத்தகங்கள். இதனை அறிந்தே பண்டைய தீப்ஸ் நகரின் நூலக வாயிலில் “புத்தகம் ஆன்மாவுக்கு மருந்து” என்று பொறிக்கப்பட்டது.
எல்லோரும் புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்பதோடு நின்றுவிடாமல், நாம் வாசித்த நல்ல நூல்களை நம் நண்பர்களுக்கும் அடையாளம் காட்டுவது நம் அனைவரின் கடமை. அந்த செம்மையான கடமையை நிறைவேற்றும் பொருட்டு தமிழ்கூறும் நல்லுலகிற்கு கவிஞர் இரா.இரவி அவர்கள் தொகுத்துத் தந்திருக்கும் நூலே “புத்தகம் போற்றுதும்” ஆகும்.
ஹைக்கூ கவிதைகளால் உலகறியப்பட்ட கவிஞர் இரா.இரவி அவர்கள் பல்வேறு இதழ்களிலும் இணையதளங்களிலும் எழுதிய நூல் விமர்சனங்களில் 50 நூல்களின் விமர்சனங்களை இந்நூலில் தொகுத்துத் தந்துள்ளார்.
“நாம் வாழும் வாழ்க்கை, பூக்களின் மீது அமரும் வண்டுகளைப் போல் மென்மையாக இருக்க வேண்டுமே தவிர, உயிர்களை வதைக்கும் மற்றொரு மிருகத்தின் வன்மச்சுவடுகளாக இருக்கக்கூடாது“ என்கிறது ஓர் பொன்மொழி. திறனாய்வு என்ற அடிப்படையில் படைப்பாளிகளை காயப்படுத்தாமல், மென்மையான வார்த்தைகளால் விமர்சித்திருக்கும் நூலாசிரியரின் நடை பாராட்டுக்குரியது. இதனையே நூலாசிரியர் தன் அணிந்துரையில் “விமர்சனம் என்ற பெயரில் படைப்பாளியை காயப்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை. முதுபெரும் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் போலப் படைப்பாளியை மயிலிறகால் வருடுவது போலவே என்னுடைய விமர்சனம் இருக்கும்.” என்று குறிப்பிட்டிருக்கிறார். கொண்ட குறிக்கோளில் உறுதியாக இருக்கும் நூலாசிரியரின் பண்பு சிறப்பு.
தான் எடுத்துக் கொண்ட நூல்களிலுள்ள சிறப்புகளை முதலில் கூறி, பின் குற்றங்களை மென்மையாக சுட்டிக்காட்டி படைப்பாளிகளின் மனதை விமர்சன மயிலிறகால் வருடியுள்ளார். திறனாய்வாளர் என்ற நிலையிலிருந்து மட்டும் நூல்களை விமர்சிக்காமல், சகபடைப்பாளி என்ற முறையிலும் விமர்சித்திருக்கும் நட்பு ரீதியிலான விமர்சன நடை எல்லோரும் ஏற்கும்படி இருக்கிறது.
நூலில் உள்ள சிறப்பம்சங்களை பட்டியலிட்டிருக்கும் கவிஞர் இரா.இரவி அவர்கள், நூலாசிரியர்களின் சிறப்பு பண்புநலன்களையும் அவர்களுடனான தன் நட்பையும் பதிவு செய்திருப்பது மற்றுமோர் சிறப்பு. நூலிலுள்ள கருத்துக்களை நினைவுகூறும் சமகால நிகழ்வுகளையும் எடுத்துக்காட்டாக சுட்டிக்காட்டியிருப்பது, நூலாசிரியர்களின் சமூகப்பார்வையையும் கவிஞர் இரா.இரவி அவர்களின் திறனையும் படம்பிடித்துக்காட்டுகிறது.
கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல் என அனைத்து வகை நூல்களையும் திறனாய்வுக்கு எடுத்திருக்கும் கவிஞர் இரா.இரவி அவர்களின் நூல் தேர்வு, ஆய்வாளர்களுக்கு விருந்தாகவும், வாசகர்களுக்கு தகவல் பெட்டகமாகவும் திகழ்கிறது. மலர்கள் பல சேர்ந்து மாலையாவதைப் போல, பல்வகை நூல்களை ஒரு சேர திறனாய்வு செய்து “புத்தகம் போற்றுதும்” நூலை கதம்பமாக படைத்தளித்துள்ளார். “இனிய நண்பர் கவிஞர் இரா.இரவியின் இந்த நூலை படித்து முடித்ததும் மொத்தத்தில் ஒரு நந்தவனத்தில் நடை பயின்ற உணர்வே நெஞ்சில் எழுகின்றது” என்று நூலின் அணிந்துரையில் தமிழ்த்தேனீ முனைவர் இரா.மோகன் அய்யா அவர்கள் குறிப்பிட்டிருப்பதே இதற்கு சான்று.
50 நூல்களையும் வாசிக்கத் தூண்டும் வாசிப்பின் திறவுகோலாக விளங்குவதே இந்நூலின் தனிச்சிறப்பு. நூலாசிரியர் தான் விமர்சித்த நூல்களின் விபரங்களையும் ஒவ்வொரு நூலுக்கும் தந்திருப்பின் வாசகர்களுக்கு மற்றுமோர் பரிசாக அமைந்திருக்கும் “புத்தகம் போற்றுதும்” நூல். புத்தகங்களை போற்றுவோம் ; புதிய உலகம் படைப்போம்.
குறிப்பு ; மதுரை புத்தகத் திருவிழாவில் அறிவுக்கடல் பதிப்பகம் கடை எண் 148 இல் புத்தகம் போற்றுதும் நூல் கிடைக்கும் . .