பிரபல தொழிலதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, 86-வயதில், மும்பை பிரீச் கெண்டி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இந்திய தொழில்துறையில் மிக முக்கியமான நபராக விளங்கிய ரத்தன் டாடா, தனது பதவிக் காலத்தில் டாடா குழுமத்தை உலகளாவிய அளவில் வளர்த்தார்.
அவரது மறைவிற்கு பல அரசியல் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் தங்களுடைய இரங்கலை தெரிவித்துள்ளனர். மராட்டி முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, ’எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், “ஒரு அரிய ரத்தினத்தை இழந்துவிட்டோம்.
ரத்தன் டாடா எப்போதும் அடுத்த தலைமுறைக்கான தொழில்முனைவோருக்கு முன்மாதிரியாக இருப்பார். அவரது துணிச்சலான முடிவுகள் மற்றும் சமூக அர்ப்பணிப்புகள் என்றும் நினைவில் நிற்கும்” என்று குறிப்பிட்டார்.
முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, ரத்தன் டாடாவின் மறைவிற்கு மரியாதை செலுத்தியதுடன், அவருடைய உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், அவரது உடல் தெற்கு மும்பையில் உள்ள கலை நிகழ்ச்சிகளுக்கான தேசிய மையத்தில் (NCPA) பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
1991-ல் டாடா குழுமத்தின் தலைவராக பொறுப்பேற்ற ரத்தன் டாடா, பல்வேறு துறைகளில் அதன் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தார். அவரது முடிவுகள், அணுகுமுறை, தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் விதமாகவும், இந்திய பொருளாதாரத்தின் முக்கியமையான ஒரு தூணாகவும் விளங்கின.