பிரபல ரவுடி வெள்ளைக்காளியை கொலை செய்ய முயன்ற வழக்கில் கைதான ரவுடி அழகராஜா, போலீஸாரைத் தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது தற்காப்புக்காகச் சுடப்பட்டதில் உயிரிழந்தார்.
கடந்த 24ம் தேதி ரவுடி வெள்ளைக்காளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு அழைத்துச் சென்றபோது வெடிகுண்டு வீசி அவரை கொலை செய்ய முயன்றார். பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்ய முயன்றது.
இதுதொடர்பாக மங்கலமேடு போலீஸாரால் கைது செய்யப்பட்ட அழகராஜாவை, அவர் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களைக் கைப்பற்ற வனப்பகுதிக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர்.
அப்போது, மறைத்து வைத்திருந்த அரிவாளால் உதவி ஆய்வாளர் சங்கரை வெட்டிவிட்டு தப்பியோட முயன்ற அழகராஜாவை, மங்கலமேடு காவல் ஆய்வாளர் நந்தகுமார் தற்காப்புக்காகத் துப்பாக்கியால் சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து பெரம்பலூர் மாவட்ட காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
