முகமறி(யா) முக (நூல்)வவரிகள்

Estimated read time 1 min read

Web team

IMG-20240926-WA0064.jpg

முகமறி(யா) முக(நூல்)வரிகள் !

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. பிரின்ஸ், செல் : 98433 34237.

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
*****
நூல் ஆசிரியர் இரா. பிரின்ஸ் அவர்கள், மதுரை தெற்குவாசலில் உள்ள நாடார் மேல்நிலைப்பள்ளியில் முதுகலை கணித ஆசிரியராக பணிபுரிந்து வருபவர். பன்முக ஆற்றல் மிக்கவர். நாங்கள் நடத்திய தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தில் தன்னம்பிக்கை பயிற்சியளித்தவர். இந்த நூல் வெளியீட்டு விழா, குடும்ப விழா போல இலக்கிய மாநாடு போல நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் திரு. க. தர்ப்பகராஜ், கல்வித்துறை இணை இயக்குனர் திருமதி. க. ஸ்ரீதேவி, பேராசிரியர் இராஜா. கோவிந்தசாமி உட்பட பலரும் கலந்து கொண்டு பாராட்டி உரையாற்றினார்கள்.

கையடக்க நூலாக இருந்தாலும் கருத்தடக்க நூலாக உள்ளது. நூலாசிரியர் கவிஞர் இரா. பிரின்ஸ் மதுரையில் நடந்த 12வது புத்தகத் திருவிழாவில் 12 நாளும் தொகுப்புரையை கவித்துவமாக வழங்கினார். இறுதி நாளில் நீதியரசர் மகாதேவன் அவர்களும் தொகுப்புரையைப் பாராட்டினார். பேச்சில் தனி முத்திரை பதித்தவர். எழுத்திலும் இந்நூல் மூலம் தனி முத்திரை பதித்து உள்ளார். பாராட்டுக்கள். புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியின் முதுநிலை தமிழாசிரியர், முனைவர் ஞா. சந்திரன் மூலம் அறிமுகமாகி நண்பரானவர் கவிஞர் இரா. பிரின்ஸ்.
நூலாசிரியர் அவரது 10ஆம் வகுப்பு கணித ஆசிரியர் Y.S. யாகு அவர்களுக்கு நன்றியைப் பதிவு செய்து நூலினைத் தொடங்கி உள்ளார். நன்றி மறவாத மாணவராக இருப்பதால் தான் நல்லாசிரியரியராகவும் திகழ்கின்றார். நூல் வெளியீட்டு விழாவிற்கு ‘தென்றல்’ அமைப்பின் மாணவர் படையே வந்து ஆசிரியரை சிறப்பித்தது. நூலில் தான் பயின்ற கல்வி நிறுவனங்களின் பெயரையும் பட்டியலிட்டு, பணியாற்றும் பள்ளியையும் குறிப்பிட்டு நன்றி பாராட்டி உள்ளார், பாராட்டுக்கள்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பி.பி.செல்லத்துரை, தேசிய மாணவர் படை மண்டல இயக்குனர் சாமுவேல் செல்லையா, நாடார் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் த. பாலசுப்பிரமணியன், அ. கார்மேகம், கணித ஆசிரியர் Y.S. யாகு (அருட்தந்தை) ஆகியோரின் அணிந்துரைகள் தோரண வாயிலாக வரவேற்கின்றன.
இந்தியாவின் கடைக்கோடியில் உள்ள தீவான இராமேசுவரத்தில் பிறந்து இந்தியாவின் முதற்குடிமகனாக உயர்ந்து மக்கள் மனங்களில் என்றும் வாழும் மாமனிதர் அப்துல்கலாமிற்கு குறைந்த சொற்களுடன் நிறைந்து வாழ்த்தை வழங்கி உள்ளார்.

கலாம் … கலாம்.

எப்பொழுதும் தேசமே சிந்தை
இப்பொழுது நீயும் எம் தேசத்(தின்) தந்தை
வணங்குகிறோம்.

தேசத்தந்தை காந்தியடிகள் வரிசையில் கலாமையும் சேர்த்தது பொருத்தம். வாழ்வியல் கருத்தை உயர்ந்த தத்துவத்தை மிக எளிய சொற்களால் உணர்ச்சி வெற்றி பெற்றுள்ளார்.

மகிழ்வைத் தேடி!

துயரம் அடைவதற்கான நிகழ்வுகள் ஆயிரம் இருந்தாலும்
மகிழ்ச்சிக்கான காரணிகளைத்
தேடித்தேடி மகிழ்வதில் தான்
வாழ்க்கையின் வசீகரம் இருக்கிறத்து.

இன்பம் எங்கே, இன்பம் எங்கே என்று தேடு என்ற பழைய திரைப்படப் பாடல் என் நினைவிற்கு வந்தது. சோகங்களை, கவலைகளை விடுத்து, இன்முகத்துடன் வாழ வழி சொல்லி உள்ளார்.

சுயமும் பயமும் !
சுயம் அறிகிற போது
பயம் விலகும்
பயம் தொலைகிற போது
சுயம் புரியும் !

இந்த வரிகளைப் படித்த போது, பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சொன்ன வைர வரிகள் நினைவுக்கு வந்தன.

புத்தி வந்தால் பக்தி போகும்
பக்தி வந்தால் புத்தி போகும்.

ஒன்றைப் படிக்கும் போது, அது தொடர்பான மற்றொன்று நினைவிற்கு வருவது படைப்பாளியின் வெற்றியாகும்.
முகநூலில் பதிந்த கவிதைகளை, பொன்வரிகளை தொகுத்து, பகுத்து, வகுத்து நூலாக்கி உள்ளார். பதிவிட்ட தேதிகளையும் குறிப்பிட்டு இருப்பது சிறப்பு.
முகநூலின் காரணமாக தொல்லைகள், துன்பங்கள் வருவதாக செய்திகள் வந்தாலும், முகநூலை நெறிப்படுத்த, ஆற்றுப்படுத்த நல்ல முறையில் பயன்படுத்தி வருகின்றார் நூலாசிரியர் கவிஞர் இரா. பிரின்ஸ். என்னுடைய 5000 முகநூல் நண்பர்களில் இரா. பிரின்ஸ்-ம் ஒருவர். இப்பதிவுகளை நான் முகநூலிலும் படித்து இருக்கிறேன். மொத்தமாக நூலாக கண்டதில் மகிழ்ச்சி.

வாழ்க்கை!
தொலைந்ததைத் தேடுவதில் இல்லை
தேடலில் தொலைந்து போவது தான் வாழ்க்கை.

சொல் விளையாட்டு விளையாடி, வாழ்க்கையின் தத்துவத்தை ஜென் கவிதை போல உணர்த்தி உள்ளார்.
முகநூலில் அற்பமானவற்றைக்கு சண்டையிட்டு நேரத்தை விரயம் செய்பவர்களுக்கு அறிவுரை போல வழங்கி உள்ள வைர வரிகள் சிந்திக்க வைத்தன.

நாம்!
சிலர் குரைப்பதைப் பார்த்து
பதிலுக்கு குரைக்கவே
முனைகிறோம் … நாம்
கர்ஜிக்க வேண்டியவர்கள் !

என்பதை மறந்து நீ நாய் அல்ல குரைப்பதற்கு கர்ஜிக்க வேண்டிய சிங்கம் என்பதை உணர்த்தி உள்ளார்.

அங்கீகாரம் !

சிம்மாசனம் தரமுடியாத சந்தோசத்தை
சிறு அங்கீகாரம் தந்துவிடும்
என்பதைச் சிந்தையில் கொண்டால்
சிகரமும் நம் கரங்களில்.

உண்மை தான். அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் தான் இல்லத்திலும், அலுவலகத்திலும் நாட்டிலும் சண்டை, சச்சரவுகள் வருகின்றன.

இடரே சுடராய்! இடர்களை எல்லாம்
வெற்றிச் சுடர்களாக
மாற்றுகிற வித்தை
புரிந்தவர்களே சாதனையாளர்கள் …

உண்மை தான். சாதனையாளர்கள் பலரும் பல இன்னல்களை சந்தித்து, முடிவில் தான் சாதிக்கின்றனர். ‘துன்பம் வரும் வேளையில் சிரிங்க’ என்ற பாடல் நினைவிற்கு வந்தது.

ரசனை!

உணவில் ரசனை
வாழ்வு ருசிகரமாகும்
உணர்வில் ரசனை
வாழ்வே வசீகரமாகும் !

அடுத்தவர் உணர்வுகளையும் மதித்து வாழ வேண்டும். உற்ற துணையின் ரசனைக்கும் மதிப்பளிக்க வேண்டும். அப்படி வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும். பெற்றோர்கள் அனைவரும் தம் குழந்தைகளை மதிப்பெண் எடுக்க வேண்டும் என்றே வற்புறுத்தி வருகின்றனர். கல்வி முக்கியம் தான், ஆனால் அதனின் முக்கியம் ஒழுக்கம். அதனை கற்பிக்க முன்வர வேண்டும்.

வார்ப்பு !

இன்றைய தேவை மதிப்பெண்கள்!
நோக்கிய வளர்ப்பு அல்ல மதிப்பீடுகள்
தாங்கி வார்ப்பு !

திருக்குறள் வடிவிலும் சில எழுதி உள்ளார். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. கருத்து நன்றாக இருந்தாலும், திருக்குறளை கேலி செய்வது போலாகும். மற்ற அனைத்தும் மிகச்சிறப்பு. பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள்.

Please follow and like us:

You May Also Like

More From Author