குழந்தை பிறப்ப விகிதம் சரிவு : தாம்பத்திய அமைச்சகம் அமைக்கும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

Estimated read time 0 min read

நாட்டில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை சமாளிக்க தாம்பத்திய அமைச்சகம் அமைப்பது குறித்து ரஷ்ய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

உக்ரைன் போர் தொடங்கி கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் ஆகிறது. போரில் உயிர் இழப்புகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இதன் காரணமாகவும் ரஷ்யாவின் மக்கள்தொகை சரிந்துள்ளது. மேலும் ரஷ்யாவின் பிறப்பு விகிதமும் கணிசமான அளவு குறைந்துள்ளது. இந்நிலையை மாற்றி அமைக்க ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். அதற்காக ரஷ்ய அதிகாரிகள் பல்வேறு புதிய உத்திகளை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் தாம்பத்திய அமைச்சகம் அமைக்கவும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே, தம்பதிகள் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்க, ரஷ்யாவின் பல்வேறு மாகாணங்களில் பல்வேறு முயற்சிகளை அந்தந்த மாகாணங்கள் செயல்படுத்தி வருகின்றன.

கபரோவ்ஸ்கில், 18 முதல் 23 வயதுக்குட்பட்ட பெண்கள், குழந்தை பெறுவதற்காக இந்திய மதிப்பில் ஒரு லட்சம் ரூபாய் வரை அரசு நிதி அளிக்கிறது. அதுவே, செல்யாபின்ஸ்கில், முதல் குழந்தை பெற்று கொள்ளும் 18 முதல் 23 வயதுக்குட்பட்ட பெண்ணுக்கு இந்திய மதிப்பில் 10 லட்சம் ரூபாய் நிதி அளிக்கப் படுகிறது.

இந்நிலையில், தம்பதிகள் தாம்பத்தியத்தில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையில், நகரில் இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை இணையத்தையும், விளக்குகளையும் அணைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலும், தாம்பத்தியத்தை ஆதரிக்கும் வகையில் மாதத்தின் முதல் நாள், இந்திய மதிப்பில் 4,300 ரூபாய் வரை நிதியளிக்க வேண்டும் என்றும், வீட்டில் இருக்கும் தாய்மார்களுக்கு வீட்டு வேலைகளுக்கு செய்வதற்கான ஊதியம் வழங்க வேண்டும் என்றும் அந்த பரிந்துரையில் சொல்லப்பட்டுள்ளது.

மேலும் தம்பதிகள் தாம்பத்தியத்திற்கு இரவு ஹோட்டலில் தங்குவதற்கு, இந்திய மதிப்பில் 23,300 ரூபாய் பொது நிதி அளிக்கவும் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.

அதிபர் புதினின் நம்பிக்கைக்குரியவரும், ரஷ்ய குடும்பப் பாதுகாப்பு, மகப்பேறு மற்றும் குழந்தைப் பருவத்துக்கான ரஷ்ய நாடாளுமன்றக் குழுவின் தலைவருமான நினா ஒஸ்தானினா, பாலியல் அமைச்சகம் அமைக்கச் சொல்லும் மனுவை மதிப்பாய்வு செய்து வருகிறார்.

ஏற்கெனவே ,ரஷ்ய சுகாதார அமைச்சரான யெவ்ஜெனி ஷெஸ்டோபலோவ், ரஷ்யர்கள் காபி மற்றும் மதிய உணவு இடைவேளைகளை தாம்பத்யத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தார்.

இதற்கிடையில், மாஸ்கோவில், அதிக பிறப்பு விகிதங்களை ஊக்குவிப்பதற்காக பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கையை அரசு சுகாதார அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் பற்றிய கேள்விகளுக்கு, நாடு முழுவதும் உள்ள மக்களிடம் இருந்து விடைகளை பொதுத்துறை பெண் ஊழியர்கள் சேகரித்துள்ளனர்.

தங்களின் தாம்பத்திய உறவு குறித்த அரசின் கேள்விகளுக்கு நேரில் பதிலளிக்க அரசு மருத்துவர்களுடன் நேர்காணல்களில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டிருக்கிறார்கள்.

Please follow and like us:

You May Also Like

More From Author