Web team
இந்திய இலக்கியச் சிற்பிகள்
மீரா !
நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
சாகித்திய அகாதெமி, குணா கட்டிடம், 443, அண்ணா சாலை,
சென்னை – 600 018. விலை : ரூ. 50.
*****
இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில், சிவகங்கையில் உதித்த புதுக்கவிதை கங்கை மீரா எனும்
மீ. இராசேந்திரன் அவர்கள் பற்றி நூல் வெளியிட்டமைக்கு முதற்கண் சாகித்திய அகாதெமிக்கு பாராட்டுக்கள். மீரா எனும் மிகப்பெரிய கவிதை ஆளுமை பற்றி, மிக நுட்பமாக ஆராய்ந்து அவரது படைப்புகளை மேற்கோள் காட்டி, மீரா அவர்களை குன்றத்து விளக்காக ஒளிர்ந்திட வைத்திட்ட இந்நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்களுக்கு அடுத்த பாராட்டுக்கள்.
கவிஞர் மீரா அவர்கள் படைத்த நூல்கள் கொஞ்சம். ஆனால் அதன் வீச்சு மிக மிக அதிகம். அந்தக்காலத்து இளைஞர்கள் கைகளில் கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் என்ற நூல் இருக்கும். மனதில் காதல் இருக்கும். ஒரே ஒரு காதல் கவிதை நூலின் மூலம் உச்சம் அடைந்தவர் மீரா. இந்த நூலில் உள்ள கவிதைகள் திரைப்படத்திலும் இடம் பெற்றன.
இப்படி மட்டும் அறிந்திருந்த மீராவைப் பற்றி அவர் மரபுக் கவிதையில் மணம் வீசியவர், புதுக்கவிதையில் பூபாளம் இசைத்தவர், வசன கவிதையில் எள்ளல் உதிர்த்தவர், கவியரங்கக் கவிதையில் கைதட்டல் பெற்றவர், குக்கூ கவிதையில் ஜப்பானை வென்றவர், கட்டுரை வடிப்பதில் புதுப்பாணி வகுத்தவர், நல்ல நகைச்சுவையாளர். இப்படி அவரது பல்வேறு ஆளுமைகளை உதாரணங்கள், மேற்கோள்கள் காட்டி கவிஞர் மீரா பற்றிய ஆவணநூலாக வந்துள்ளது. பாராட்டுக்கள். நூலாசிரியர் தமிழ்த்தேனீ அவர்களின் கடின உழைப்பை உணர முடிந்தது. நூல் எழுதுவதில் சதம் தாண்டியவரின் சாதனை நூல் இது.
இந்த நூல் கவிஞர் மீரா அவர்கள் வாழும் காலத்தில் தந்து இருந்தால் அவரது வாழ்நாள் இன்று வரை நீட்டித்து இருக்கும். ஆம். அவ்வளவு அகமகிழ்வை அவருக்கு வழங்கி இருக்கும். படைப்பாளியின் படைப்பை மேற்கோள் காட்டி பாராட்டப்படுவதை விட உயர்ந்த இன்பம் வேறில்லை.
இன்று, அரசு வேலை சில ஆயிரங்கள் என்றால், அதற்கு தேர்வு எழுதுபவர்கள் பல இலட்சம் பேர். அந்த அளவிற்கு போட்டி மிகுந்து விட்டது. ஆனால் கவிஞர் மீரா அவர்கள், தேர்வு எழுதி வெற்றி பெற்று கிடைத்த பதவியில், வருவாய்த்துறையின் உதவியாளராக சிலகாலம் பணியாற்றி, தமிழ்ப்பற்றின் காரணமாக வேலையை துறந்தவர் என்ற செய்தி இந்த நூலில் படித்து வியந்து போனேன். பின்னர் அவர் சிவகங்கை கல்லூரியில் விரிவுரையாளராக சேர்ந்து, முதல்வராக பொறுப்பு ஏற்றவர் என்று தகவலும் நூலில் உள்ளது. அரசுப்பணியை விட ஆசிரியப் பணியே சிறந்த அறப்பணி என்று விரும்பி ஏற்றவர் மீரா என்பதை அறிந்து வியந்து போனேன்.
நூலில் மீரா-வின் வாழ்க்கை வரலாறு மிகச் சுருக்கமாக, ஆனால் மிகத் துல்லியமாக உள்ளது.
நூலிலிருந்து சில துளிகள் :
“மீராவின் திருமணம் 1964-ஆம் ஆண்டில் நிகழ்ந்தது, சுசீலா என்னும் நல்லாள் அவருக்கு வாழ்க்கைத் துணைவியாக அமைந்தார். இல்லற வாழ்வின் பயனாக மீரா-சுசீலா இணையருக்கு ஆண் மக்கள் இருவரும் (சுடர், கதிர்), பெண்மகள் ஒருத்தியும் (கண்மணி செல்மா) பிறந்தனர்”.
மீரா அவர்களின் மகள் கவிதை எழுதி வருகிறார். மீராவின் குழந்தைகள் மட்டுமன்றி அவரது இலக்கியப் படைப்பும் குழந்தைகள் பற்றியும் விரிவாக நூலில் உள்ளன.
மரபில் பூத்த புதுமலரின் வாசத்தில் சில துளிகள்.
இறைநிலை எய்தல் இருக்கட்டும் ; முதலில்
மனிதனாய் மாறு ; மாற்று உன் சாதியை
……… இதோ வாள் : (பக். 142-143)
“கடவுளாகிறேன் என்று கதை கட்டுவதை விட்டு விட்டு முதலில் மனிதனாக மாறு” என்று எள்ளல் சுவையுடன் உள்ள கவிதையை மேற்கொள்காட்டி கவிஞர் மீராவின் படைப்பாற்றலை படம்பிடித்துக் காட்டியது. நூலாசிரியருக்கு பாராட்டுக்கள்.
கவிஞர் மீரா அவர்களின் கவியரங்கக் கவிதை ஆற்றலை உணர்த்தும் கவிதை ஒன்று.மூடநம்பிக்கைகளை சாடும் விதமாக வடித்த கவிதை நன்று.
மூன்றுபே ராய்ச் சென்றால்
முடியாது வினை என்று
மூன்றை வெறுப்பவர்கள்
முட்டாள்கள் ; மாறாக
மூன்றாம் உலகப் போர்
மூளக்கூடாது என்போர்
சான்றோர் துயரச்
சரித்திரத்தைக் கற்றுணர்ந்தோர்! (பக். 81-82)
தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள், நூல் எழுதும் போது எதையும் மேலோட்டமாக எழுத மாட்டார்கள். நுட்பம், செம்மை எல்லாம் இருக்கும். பக்க எண் வரை மிக நுட்பமாக குறிப்பிட்டு எழுதுவார்கள். வாசகர்கள் அந்த நூலை எடுத்துப் பார்த்து படிக்க வசதியாகவும், வியப்பாகவும் இருக்கும்.
கவிஞர் மீரா அவர்கள் வசன கவிதை படைப்பதிலும் வித்தகர். அதிலும் காதல் கவிதை அனைத்தும் கற்கண்டு. அன்றைய பல காதலர்கள், அவர்கள் எழுதியது போல எழுதி, காதலியிடம் தந்த வரலாறுகளும் உண்டு. காதல் கவிதை அறியாமல், காதலன் எழுதிய கவிதை என்று, ஏமாந்த காதலிகளும் உண்டு.
நீ முதல்முறை
என்னைத் தலைசாய்த்து
கடைக்கண்ணால்
பார்த்தபோது
என் உள்ளத்தில்
முள் பாய்ந்தது
அதை இன்னும் எடுக்கவில்லை
முள்ளை முள்ளால் தானே
எடுக்க வேண்டும்?
எங்கே இன்னொரு முறை பார்.
(கவிதை 13, பக்.25)
இன்றைக்கு உள்ள அரசியலைச் சாடி, நான் உள்பட பலரும் கவிதைகள் எழுதி வருகின்றோம். ஆனால் எங்களுக்கெல்லாம் முன்னோடி யார்? என்றால் கவிஞர் மீரா தான். அங்கதச் சுவையுடன் அரசியல்வாதிகளை சாடுவதற்கு புதுப்பாதை போட்ட மீராவின் அற்புதமான படைப்பாற்றலைக் கண்டு வியந்து போனேன். கவிஞர் மீரா அவர்கள் அரசியல்வாதிகள் குறித்து அன்று எழுதிய கவிதை இன்றும்,என்றும் பொருந்துவதாக உள்ளது. பாருங்கள்.
பதச்சோறாக ஒன்று மட்டும்.
அப்புசாமியின்
அப்பா
ஆணை மாதிரி
இருந்த போது
எம்.பி. பதவி
இறந்த போது
சிவலோக பதவி
அப்புசாமியின்
அப்பா
ஆணை மாதிரி (ஊசிகள் பக். 24)
ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளை மிஞ்சும் வண்ணம் குக்கூ கவிதையும் வடித்தவர் கவிஞர் மீரா. இலக்கியத்தின் எல்லா வடிவத்திலும் முயற்சிகள் செய்து வெற்றி பெற்றவர். குக்கூ கவிதையில் சித்தர்கள் போல வாழ்வின் நிலையாமையை உணர்த்தி உள்ளார். பாருங்கள்.
வீடு கட்டினேன்
சுடுகாட்டுக் கெதிரில்,
எந்த நேரமும்
விடை பெறலாம் எளிதில் (பக். 39)
கவிஞர் மீரா அவர்கள் நகைச்சுவை உணர்வுடன் வடித்த கவிதை ஒன்று.
வாத்தியார் மனைவி
செத்ததற்காக
விடுமுறை
மகிழ்ச்சியில் குதித்த
மணிப்பயல் கேட்டான்
வருத்தமாயிருக்கு
ஒரே ஒரு மனைவி தானா
அவருக்கு?
படித்தால் வியப்பில் ஆழ்த்தும் கவிஞர் மீரா அவர்களின் படைப்பாற்றலை படம் பிடித்துக் காட்டும் அற்புத நூல். பாராட்டுக்கள்.
நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள் எழுத்து ,பேச்சு என்ற இரண்டு துறையிலும் தனக்கென தனி முத்திரை பதித்து தொடர்ந்து நூல்கள் பல எழுதி இலக்கிய நேசர்களின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்து உள்ளார். பாராட்டுக்கள் .