சமீபத்தில் சமூக அரசு பள்ளிகளில் பத்தாயிரம் போலி ஆசிரியர்களை வைத்து பாடம் நடத்தப்படுவதாக செய்திகள் பரவின. இதனை பள்ளி கல்வித்துறை திட்டவட்டமாக மறுத்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் தர்மபுரி அரூர் கல்வி மாவட்டம் காரியமங்கலம் ஒன்றியம் கிராமியம் பற்றி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக கே. பாலாஜி என்பவர் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் தனக்கு பதிலாக வேறொரு நபரை கொண்டு வகுப்பறையில் பாடம் நடத்தியதால் அவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படுவதை தவிர்க்கும் பொருட்டு ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் பணிகளை மேற்கொள்ளாமல் வெளியில அவரைக் கொண்டு மாணவர்களுக்கு பாடம் நடத்துவது குறித்து பள்ளி ஆண்டாய்வு மற்றும் பள்ளி பார்வையின்போது கண்டறியப்பட்டாலோ அல்லது இது குறித்து புகார்கள் ஏதேனும் பெறப்பட்டாலோ கண்டிப்பாக அந்த புகார் மீது தனிக்கவனம் செலுத்தி மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு இறுதியானை பிறப்பிக்க வேண்டும்.
மேலும் தொடக்க கல்வியில் தகுதியுள்ள காலிப் பணியிடத்தில் பள்ளி மேலாண்மை குழு மூலம் நியமனம் பெற்ற 653 எண்ணிக்கையிலுள்ள தற்காலிக ஆசிரியர்கள் தவிர வேறு ஏதேனும் நபர்கள் பணிபுரிந்து வருகின்றனரா என அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களிடமும் அறிக்கை கேட்கப்பட்டது.
அதன்படி மாவட்ட கல்வி அலுவலரின் ஆளுகைக்கு உட்பட்ட வட்டார கல்வி அலுவலர்களிடமிருந்து வேறு நபர்களைக் கொண்டு பாடம் கற்பித்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் குறித்த விபர அறிக்கை எதுவும் தரப்படவில்லை. ஆகையால் மாவட்ட கல்வி அலுவலர்களிடம் இருந்து எந்தவித அறிக்கையும் பெறப்படவில்லை.
ஆகவே பத்தாயிரம் போலி ஆசிரியர்களை கொண்டு மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகள் நடைபெறுவதாக சமூக ஊடகங்களில் வரும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை ஆகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.