காஞ்சிபுரம் மாவட்டத்தில் குறைந்த அளவு பெய்துள்ள மழையால் பெரும்பாலான ஏரிகள் நிரம்பாத நிலையில், கோடை காலத்தில் ஏரிநீர் பாசனத்தை நம்பியுள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் வழக்கத்தை விட அதிகமான மழைப்பொழிவு இருந்தாலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குறைந்த அளவே மழை பெய்துள்ளது. அந்த மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில், வெறும் 36 ஏரிகள் மட்டுமே முழுமையாக நிரம்பியுள்ளதாகவும், 77 ஏரிகள் 76 சதவீதம் முதல் 99 சதவீதம் வரை நிரம்பியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையில் பெரும்பாலான ஏரிகள் நிரம்பியிருந்த நிலையில், இம்முறை குறைந்த அளவிலான ஏரிகளே நிரம்பியுள்ளன. இதனால், கோடை காலத்தில் ஏரிநீர் பாசனத்தை நம்பியுள்ள சுமார் 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.