மண்சரிவில் சிக்கிய 7 பேர் நிலை? “நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்” அமைச்சர் பதில்!

Estimated read time 0 min read

ஃபெஞ்சல் புயல் நேற்று கரையை கடந்த சமயம் புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர் என வடமாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது, திருவண்ணாமலை பகுதியிலும் கனமழை பெய்தது. இதனால் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மலையடிவாரத்தில் வஉசி நகர் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 7 பேர் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்கும் பணியில் தேசிய மீட்புப்படையினர் மற்றும் மாநில மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மீட்புப்பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “4 பெண் குழந்தைகள், ஒரு ஆண், ஒரு பெண், ஒரு பெரியவர் என 7 பேர் நிலச்சரிவில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க மாவட்ட நிர்வாகம் நேற்று முதல் முயற்சித்து வருகிறது. மாநில அரசு சார்பாக மாநில மீட்புப்படையினர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்டு மீட்கப்பட்ட மக்களை அரசு பள்ளி முகாம்களில் தங்க வைத்து வருகிறோம். மீட்பு பணியில் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மீட்புப்பணியில் இடையூறாக பாறை ஒன்று இருக்கிறது. ஆனால், இப்போது பாறை உடைக்கும் செயலை செய்ய முடியாது. முதலமைச்சர் உத்தரவின் பெயரில் ஐஐடி பேராசிரியர்கள் இங்கு வரவழைக்கப்பட்டுள்ளார்கள்.

உள்ளே இருபவர்கள் நிலை குறித்து உறுதியாக தெரியவில்லை. உயிருடன் இருப்பார்கள் என நம்புகிறோம். இவ்வாறான பல்வேறு சமயங்களில் பலரை சில சமயம் காப்பாற்றி இருக்கிறோம் . அதனால் , மீட்புப்பணிகளில் நம்பிக்கையுடன் பணிகளை தொடர காத்திருக்கிறோம். போதுமான அளவுக்கு இங்கு மீட்பு பணி வீரர்கள் இருக்கிறார்கள். இது குறுகிய பாதை என்பதால் பெரிய இயந்திரங்களை உபயோகப்படுத்த முடியவில்லை. ஒருவர் உள்ளே போகும்படி தான் வழி இருக்கிறது. ஆட்கள் முலமாக தான் மீட்பு பணிகளை செய்ய வேண்டி இருக்கிறது” என திருவண்ணாமலை மண்சரிவு மீட்புப்பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author