மகாராஷ்டிர சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத் தொடர் இன்று நடைபெற்றது.
இதனையொட்டி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள விதான் பவனுக்கு வருகை தந்த முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதலமைச்சர்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் உள்ளிட்டோர் சத்ரபதி சிவாஜியின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அஜித் பவார், சத்ரபதி சிவாஜி மகாராஜ் மற்றும் அம்பேத்கரின் சித்தாந்தத்தைப் பின்பற்றி செயல்பட விரும்புகிறோம் என தெரிவித்தார். இதனையடுத்து தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதலமைச்சர்கள் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டனர்.
மகாராஷ்டிரா சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடரின் முதல் நாளில் நடந்த பதவியேற்பு விழாவை எதிர்க்கட்சி தலைவர்கள் புறக்கணித்தனர். இது குறித்து பேசிய சிவசேனா தலைவர் ஆதித்யா தாக்கரே, மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டதா என சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார்.
இதனால் சிறப்புக் கூட்டத் தொடரின் முதல் நாளில் தங்கள் அணியினர் எம்எல்ஏக்களாக பதவியேற்க மாட்டார்கள் எனவும் அவர் கூறினார்.