பிளாக்ராக் , கோல்ட்மேன் சாச்ஸ், சிட்டிகுரூப் உள்ளிட்ட சர்வதேச நிதி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் சீனத் துணைத் தலைமை அமைச்சர் ஹெ லிஃபெங் அண்மையில் அடுத்தடுத்து சந்தித்து உரையாடினார்.
இந்த சந்திப்புகளில் ஹெ லிஃபெங் கூறுகையில்
மேலதிக வெளிநாட்டு நிதி நிறுவனங்கள், நீண்டகால மூலதனங்கள் ஆகியவை சீனாவில் முதலீடு மற்றும் வணிகம் செய்து, சீனாவின் வளர்ச்சி வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்வதை சீனா வரவேற்பதாக தெரிவித்தார்.
நிதி அமைப்புமுறையின் சீர்திருத்தங்களை மேலும் ஆழமாக்கவும், நிதித் துறையில் நிறுவன ரீதியிலான திறப்பை நிதானமான முறையில் விரிவாக்கவும், வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவில் இயங்குவதற்கு மேலதிக வசதி வழங்கவும் சீனா செயல்பட்டு வருகிறது என்றும் ஹெ லிஃபெங் சுட்டிக்காட்டினார்.
இந்த சந்திப்பின்போது, சீனப் பொருளாதாரம் மற்றும் நிதி சந்தையின் எதிர்கால வளர்ச்சி மீது நம்பிக்கை காட்டிய இந்த மூன்று நிதி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், சீனச் சந்தையில் தங்களது இருப்பை ஆழமாக்கி, பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்துவதாகவும் விருப்பம் தெரிவித்தனர்.