சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங் யீ டிசம்பர் 28ஆம் நாள் பெய்ஜிங்கில் ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
வாங் யீ கூறுகையில், சீனாவும் ஈரானும் பன்முக நெடுநோக்கு கூட்டாளிகளாகவும் “உலகின் தென் பகுதியின்” முக்கிய உறுப்பு நாடுகளாகவும் விளங்குகின்றன.
இரு நாட்டுறவு வாழையடி வாழையாக நிலவி வருகின்றது. இரு நாடுகள் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, இரு நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் என்பது மட்டுமல்லாமல், பிரதேச மற்றும் உலகின் அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை விரைவுபடுத்துவதற்குப் பங்காற்றும் என்று தெரிவித்தார்.
அராக்சி கூறுகையில், ஈரானின் தூதாண்மை கொள்கையில் ஈரான்-சீன பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவை வளர்ப்பது மற்றும் மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
சீனாவுடன் உயர் நிலை தொடர்பை நெருக்கமாக்கி, ஒன்றுக்கொன்று நன்மை பயக்கும் ஒத்துழைப்பை ஆழமாக்கி, ஐ.நா, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, பிரிக்ஸ் முதலிய பலதரப்பு கட்டுக்கோப்புக்குள் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, பொது நலனைப் பேணிக்காப்பதை ஈரான் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
மத்திய கிழக்கு பிரதேசம், அப்பிரதேச மக்களுக்குரியது. இது வல்லரசுகள் போட்டியிடும் அரங்கு அல்ல. மத்திய கிழக்கு பிரதேச நாடுகளின் எதிர்காலம் அப்பிரதேச மக்களால் தீர்மானிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் ஒருமனதாக கருத்து தெரிவித்தனர்.