தமிழக அரசுப் பணியாளர் (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016-ன் படி, அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு வழங்கப்படக்கூடிய 30 சதவீத இடஒதுக்கீட்டில், ஆதரவற்ற விதவைகளுக்கென 10 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதற்கு முன்பு 2006-ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட வருமான உச்சவரம்பு தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
1. வருமான உச்சவரம்பு உயர்வு: கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் நிலவி வரும் வாழ்க்கைச் செலவினங்கள் மற்றும் ஊதிய உயர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மாதாந்திர வருமான உச்சவரம்பு ரூ.4,000-லிருந்து ரூ.8,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
2.இந்த ரூ.8,000 வருமானத்திற்குள் குடும்ப ஓய்வூதியம், தனிப்பட்ட முறையில் செய்யும் தொழில் மூலம் கிடைக்கும் வருமானம் மற்றும் இதர அனைத்து வாழ்வாதார வருமானங்கள் அடங்கும்.
3. தகுதி நீக்கம்: அரசாணையின்படி, கணவரை இழந்தவர்கள் மட்டுமே ‘ஆதரவற்ற விதவை’ பிரிவில் வருவார்கள். விவாகரத்து பெற்றவர்கள் (Divorcees) இந்தப் பிரிவின் கீழ் சலுகை கோர முடியாது என்பது மிக முக்கியமான நிபந்தனையாகும்.
4. எந்தப் பணிகளுக்குப் பொருந்தும்?
நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் பணியிடங்களில், நிலை-10-க்கு (Level 10) மேற்பட்ட சம்பளம் கொண்ட பணியிடங்களுக்கு இது பொருந்தாது. அதற்கு உட்பட்ட பணியிடங்களுக்கு மட்டுமே இந்த முன்னுரிமை வழங்கப்படும்.
ஆதரவற்ற விதவைச் சான்றிதழ் பெறுவது எப்படி?
அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை பெற விரும்பும் தகுதியுள்ள பெண்கள் ஆதார் அட்டை மற்றும் ரேஷன் கார்டு, கணவரின் இறப்புச் சான்றிதழ்,
வயதுக்கு பள்ளி மாற்றுச் சான்றிதழ் அல்லது பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றை கொடுக்க வேண்டும். மேலும், வட்டாட்சியர் அலுவலகம் மூலம் பெறப்பட்ட வருமானச் சான்றிதழ் கொடுக்க வேண்டும். கூடவே, விண்ணப்பதாரரின் புகைப்படம் கொடுக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
1. ஆன்லைன் விண்ணப்பம்: தங்களுக்கு அருகிலுள்ள அரசு இ-சேவை மையம் (e-Sevai) மூலம் விண்ணப்பிக்கலாம். அல்லது tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் நேரடியாகப் பதிவேற்றலாம்.
2. ஆய்வு நடைமுறை: விண்ணப்பித்த பிறகு, அந்தந்தப் பகுதியின் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் விண்ணப்பதாரரின் இருப்பிடம் மற்றும் வருமானம் குறித்து நேரடி கள ஆய்வு செய்வார்கள்.
3. சான்றிதழ் வழங்குதல்: அதிகாரிகள் சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் (RDO) அல்லது துணை ஆட்சியர் மூலம் டிஜிட்டல் கையொப்பமிட்ட சான்றிதழ் வழங்கப்படும்.
இந்த அரசாணை மூலம், வறுமைக் கோட்டிற்குச் சற்றே மேலாக வருமானம் ஈட்டும் பெண்களும் இனி ஆதரவற்ற விதவை என்ற அந்தஸ்தைப் பெற முடியும். இதன் மூலம் டிஎன்பிஎஸ்சி (TNPSC) போன்ற போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அவர்களுக்குக் கூடுதலாகக் கிடைக்கும்.
