சீன அரசு டிசம்பர் 26ஆம் நாள் 5ஆவது தேசியப் பொருளாதார ஆய்வு முடிவை வெளியிட்ட பின் பல வெளிநாட்டு ஊடகங்கள் சீனப் பொருளாதாரத்தை வெகுவாக பாராட்டின.
அதே நாள், இவ்வாண்டு மற்றும் அடுத்த ஆண்டு சீனப் பொருளாதார அதிகரிப்பு மீதான மதிப்பீட்டை உலக வங்கி உயர்த்தியது. புள்ளி விவரங்களின்படி, 2023ஆம் ஆண்டு சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, ஒரு கோடியே 30 லட்சம் கோடி யுவானைக் கிட்டுகிறது.
சீனாவின் மொத்த பொருளாதார அளவு, உலகில் இரண்டாவது இடம் வகிக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், உலகப் பொருளாதார அதிகரிப்புக்கு சீனாவின் பங்களிப்பு விகிதம் சுமார் 30 விழுக்காடாகும். உலகப் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றுவதற்கான மிக பெரிய ஆற்றலாக சீனா விளங்குகிறது.
சீன ரென்மின் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரக் கல்லூரியின் பேராசிரியர் வாங் சியவ்சுங் கூறுகையில், சீன அரசு பயன்மிக்க ஒட்டுமொத்த கட்டுப்பாட்டு கொள்கையை நடைமுறைப்படுத்தி, காலத்திற்கு ஏற்ப புதிய தர உற்பத்தி ஆற்றலை விரைவாக வளர்த்து, பொருளாதாரத்தின் உயர் தர வளர்ச்சியை முன்னேற்றி வருவதானது, சீனப் பொருளாதாரம் இத்தகைய சாதனைகளைப் பெற்றதற்கு முக்கிய காரணமாகும். தவிர, சீனப் பொருளாதாரம், நிதானமான அடிப்படை, அதிகமான மேம்பாடுகள், வலுவான உறுதித் தன்மை, பெரிய உள்ளார்ந்த ஆற்றல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சீனப் பொருளாதாரம் தொடர்ந்து சீராக செயல்படுவதை இது தூண்டியுள்ளது என்று கருத்து தெரிவித்தார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில், உலகப் பொருளாதார சரிவு என்ற அழுத்தம் அதிகரிப்பது, புவிசார் அரசியல் பதற்றம் தீவிரமாகுவது, வர்த்தகப் பாதுகாப்புவாதம் தலைத்தூக்குவது, கரோனா நோய் பாதிப்பு முதலிய அபாயங்களை எதிர்நோக்கி, சீனப் பொருளாதாரம், அழுத்தத்தைத் தாங்கி, கட்டமைப்பு மேம்பாடு, புத்தாக்கம், பசுமையான வளர்ச்சி முறை மாற்றம் முதலிய துறைகளில் பல ஆக்கப்பூர்வ மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
அதே வேளையில், உலக நாணய நிதியத்தின் ஆய்வின்படி, சீனப் பொருளாதார அதிகரிப்பு, உலகின் இதர பிரதேசங்களுக்கு சாதகமான செல்வாக்கை ஏற்படுத்தியுள்ளது. சீனப் பொருளாதாரம் 1 சதவீதப் புள்ளியை அதிகரித்தால், இதர பொருளாதார சமூகத்தின் உற்பத்தி அளவு, சராசரியாக 0.3 சதவீதப் புள்ளியை அதிகரிக்கிறது. அண்மையில், BMW, Sanofi உள்ளிட்ட மேலதிக பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் சீனாவில் முதலீட்டை அதிகரித்து, உற்பத்தியை விரிவாக்கியுள்ளன. சீனப் பொருளாதாரம் மீதான பல்வேறு தரப்புகளின் நம்பிக்கையை இது வெளிப்படுத்தியுள்ளது.
பெல்ஜியம்-சீனப் பொருளாதார வர்த்தக குழுவின் தலைவர் பெர்னர்ட் டேவிட் கூறுகையில், மேலும் செழுமையான சீனா, உலகப் பொருளாதாரத்துக்கு நிலைத்தன்மையை உட்புகுத்தும். மேலும் திறந்த சீனா உலகிற்கு நன்மை பயக்கும் என்று கருத்து தெரிவித்தார்.