திருப்பரங்குன்ற மலையை காத்திட பிப்ரவரி 4 -இல் மாபெரும் அறப்போராட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

Estimated read time 1 min read

ஆறுபடையில் முதல் படைவீடான திருப்பரங்குன்ற மலையைக் காத்திட பிப்ரவரி 4 ஆம் தேதி மாபெரும் அறப்போராட்டம் நடைபெற உள்ளதாக இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், திருப்பரங்குன்றம் மலை யாருக்குச் சொந்தம் என்ற பிரச்சனை வந்த பொழுது அந்த திருப்பரங்குன்றம் மலை முழுவதுமே திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்குச் சொந்தமானது என லண்டன் பிரிவியூ கவுன்சில் நீதிமன்ற தீர்ப்பு கூறியுள்ளதாகவும் அந்த தீர்ப்பு தற்போதும் நடைமுறையில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

1996 ஆம் வருடம் சென்னை உயர்நீதிமன்றமும் குன்றில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டது. இதன் பின்னரும் கூட இந்து சமய அறநிலையத்துறை, தீபத் தூனில் தீபம் ஏற்றாமல் மோட்ச தீபம் ஏற்றும் இடத்தில் தீபம் ஏற்றி வருகிறது. தீபத்தூணில் தான் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென இந்து முன்னணியும் இந்துக்களும் பலமுறை போராட்டம் நடத்தியும் அரசு அனுமதி அளிக்காமல் தடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் அந்த இடத்தின் மீது எந்த உரிமையும் இல்லாத இஸ்லாமிய அமைப்புகள் திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்றும் அந்த மலையில் உள்ள தர்காவில் ஆடு வெட்டி கந்தூரி செய்வோம் என திட்டமிட்டு மதக் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு திருப்பரங்குன்ற மலைக்கு அத்துமீறி சென்றார்கள்.

கோவிலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி பொதுமக்கள் மத்தியில் வன்முறையைத் தூண்டி அச்சத்தை ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மணப்பாறை‌ திமுக MLA அப்துல் சமது மற்றும் ராமநாதபுரம் திமுக MP ஆகியோர் திருப்பரங்குன்றத்திற்கு ஆய்வு செய்வதாகச் சொல்லி சென்றுள்ளனர். இது அப்துல் சமதுவின் தொகுதி இல்லை. அதே போல் நவாஸ்கனி தொகுதியும் இல்லை. அவர்கள் அமைச்சர்களாகவும் இல்லை. அதுமட்டுமல்லாது பயங்கரவாத அமைப்பினரை உடன் அழைத்து சென்றுள்ளனர். இது திட்டமிட்ட சதி என்பது அப்பட்டமாக தெரிகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

இருவரும் திமுக தலைமையின் வழிகாட்டலில் தான்‌ சென்றுள்ளனர் என்பது காவல்துறை அதிகாரிகள் அவர்களை தடுக்காமல், அனுமதி அளித்ததிலிருந்து அறிய முடிகிறது.

இதில் MP நவாஸ் கனி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய முருகன் கோவில் முன்பாக அமர்ந்து அசைவ உணவை சாப்பிட்டுள்ளார். இதன் போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. அந்த புனிதமான மலை மீது காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ளது. அத்தகைய புனிதத்தை கெடுக்க துணிந்துள்ளார் திமுக கூட்டணியின் எம்.பி. நவாஸ் கனி.

மேலும் சமீபத்தில் எஸ்டிபிஐ கட்சியின் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள முஸ்லிம் சமாதியை வைத்து திருப்பரங்குன்றம் மலையை முழுவதுமாக கையகப்படுத்திட வேண்டும் என்றும் இதன்மூலம் தமிழகம் முழுவதும் பிரச்சினையை உருவாக்க வேண்டும் என்று பேசியதாக தகவல்கள் தெரிய வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இஸ்லாம் மதத்தின் படி சமாதி கட்டுவது, தர்கா வழிபாடு தடை செய்யப்பட்டது. அது இஸ்லாமிய மத விரோதம் ஆகும். அப்படி இருக்கையில் இது திட்டமிட்டு மதக்கலவரத்தை தூண்டுகிற செயல் தான் என்று முருக பக்தர்கள் எண்ணுகிறார்கள்.இவை எதையுமே தடுக்காமல் திராவிட மாடல் அரசு கள்ள மௌனம் சாதித்து வருகிறது.

திட்டமிட்டு திருப்பரங்குன்றம் முதல் படைவீட்டில் மதக் கலவரத்தை தூண்ட முயற்சிக்கும் இஸ்லாமிய அமைப்புகளை கண்டித்தும் தமிழக அரசு இஸ்லாமிய அமைப்புகளின் சதியை முறியடிக்க வலியுறுத்தியும் இந்து முன்னணி மக்களைத் திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை பிப்ரவரி 4ம் தேதி நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author