தமிழ்நாடு லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவராக பி. ராஜமாணிக்கம் என்பவரை ஆளுநர் நியமித்துள்ளதாக தமிழக அரசு தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது.
இவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஆவார். இந்த அமைப்பில் நீதிசராத இரண்டு உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி நாமக்கல் மாவட்ட நுகர்வோர் குறை தீர்ப்பு கமிஷனின் தலைவர் வி. ராமராஜ் மற்றும் வருமான வரிகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் முன்னாள் உறுப்பினர் ஆறுமுக மோகன் ஆகிய இருவர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் 2027 ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி வரை பதவியில் நீடிப்பார். மற்ற உறுப்பினர்கள் தங்களுக்கு 70 வயது ஆகும் வரையிலோ அல்லது 5 ஆண்டுகள் வரையிலோ எது முதலில் வருகிறதோ அதுவரையில் பதவியில் நீடிப்பார்கள். மேலும் பி. ராஜமாணிக்கம் கடந்த 1983 ஆம் ஆண்டு வழக்கறிஞராக தன் பணியை தொடங்கிய நிலையில் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். இதை தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு அவர் நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.