சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், போடுரெட்டிப்பட்டியில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் உள்ள 40-க்கும் மேற்பட்ட அறைகளில் நாள்தோறும் சுமார் 80 தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டிருந்தபோது, உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் ஒரு அறை முற்றிலும் இடிந்து தரைமட்டமான நிலையில், தகவலறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
விபத்தில் சுரேஷ் என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், பால்பாண்டி என்ற மற்றொரு தொழிலாளி 20 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து மாரநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.