சுற்றுச்சூழலை பாதுகாப்பதில், அருணாச்சலப் பிரதேச மக்கள் கடைப்பிடித்து வரும் அணுகுமுறையை நாட்டு மக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் வலியுறுத்தியுள்ளார்.
அருணாச்சலப் பிரதேசத்தின் இட்டாநகரில் நடைபெற்ற, 38-வது மாநில நிறுவன தின கொண்டாட்ட நிகழ்ச்சியில், குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கலந்து கொண்டார்.
மேலும், அருணாச்சலப் பிரதேச ஆளுநர் கைவால்யா திரிவிக்ரம் பர்நாயக், முதலமைச்சர் பெமா காண்டு, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கூறியதாவது, இந்த மாநில மக்களின் வாழ்க்கை முறை இயற்கையுடன் இணைந்த சகவாழ்வுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. இந்த மாநிலத்தின் அழகிய நிலப்பரப்பு, பனி மலைகள் மற்றும் பசுமையான காடுகள் அனைவரையும் ஈர்ப்பதாக உள்ளது. இம்மாநிலத்தின் இயற்கை விளைபொருட்களுக்கு தேசிய மற்றும் சர்வதேச அளவில் பெரிய சந்தைகள் உள்ளன.
எட்டு வடகிழக்கு மாநிலங்களும், அஷ்ட லட்சுமிகள் என்று குறிப்பிட்ட அவர், வடகிழக்குப் பகுதி இல்லாமல் நாட்டின் கலாச்சார கட்டமைப்பு முழுமையடையாது என்று தெரிவித்தார்.
மேலும், இந்தப் பகுதியில் உட்கட்டமைப்பு, சாலை, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து வசதிகளில் ஏற்பட்டுள்ள வியக்கத்தக்க முன்னேற்றம் வளர்ச்சியைப் பிரதிபலிப்பதாக உள்ளது என்று கூறினார்.