மக்களவை தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் நகரில் உள்ள அனுமன் கோவிலில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் குடும்பத்தினருடன் நேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் பிரதமர் நரேந்திர மோடியின் “மன் கி பாத்” நிகழ்ச்சியை பெரிய டிஜிட்டல் திரையில் அவர் பார்த்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,மன் கி பாத்’ 109வது பதிப்பில், பிரதமர் மோடி அயோத்தியில் ராமர் கோயிலின் முக்கியத்துவத்தையும், அது தேசத்தை எப்படி ஒன்றிணைத்தது என்பதையும் எடுத்துரைத்ததாக தெரிவித்தார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
இண்டி கூட்டணியில் உள்ள கட்சிகள் தேர்தல் வரை நீடிக்காது என்பது அனைவரும் அறிந்ததே. ஏற்கனவே கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நீலகிரி தொகுதியில் நான் போட்டியிடுவதா இல்லையா என்பதை தலைமைதான் முடிவு செய்யும் என்றும் எல்.முருகன் குறிப்பிட்டார்.