மதுரையில் 17ம் தேதி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!!

Estimated read time 1 min read

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

திமுக அரசு பொறுப்பேற்று கடந்த 55 மாதங்களாக, மதுரை மாநகரில் அம்மா அரசின் பொற்கால ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி திறந்ததைத் தவிர எந்தவிதமான புதிய திட்டங்களும் கொண்டுவரப்படவில்லை. குறிப்பாக, மதுரை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான முன்மொழிவைக்கூட இந்த திமுக அரசு முழுமையாக வழங்கவில்லை.
வீடுகளுக்கு 100 சதவீத வரி உயர்வு, வணிக நிறுவனங்களுக்கு 150 சதவீத வரி உயர்வு மற்றும் குடிநீர் கட்டணம், குப்பை வரி ஆகியவற்றின் உயர்வால், மதுரை மாநகராட்சியின் வரி வருவாய் பலமடங்கு உயர்ந்தும், திமுக ஆட்சியில் மதுரை மாநகரில் அனைத்து வட்டங்களிலும் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாகக் காட்சி அளிக்கின்றன; சாலைகளில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது.
மதுரை மாநகர மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில், எனது தலைமையிலான அம்மாவின் அரசால் அடிக்கல் நாட்டப்பட்டு, தொடங்கப்பட்ட முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் பணிகள் முழுமையாக முடிவடையும் முன்பே, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலை மனதில் வைத்து, முதல்-அமைச்சர் ஸ்டாலின், கடந்த வாரம் இத்திட்டத்தை அவசர கதியில் தொடங்கி வைத்தார்.
24 மணி நேரமும் மதுரை மாநகர் மக்களுக்கு குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட இத்திட்டத்தை, அவசர கதியில் திமுக அரசின் முதல்-அமைச்சர் தொடங்கி வைத்ததால், மதுரை மாநகர மக்களுக்கு, நாள் முழுவதும் குடிநீர் வழங்குவதற்கு பதில், பழையபடி குறிப்பிட்ட நேரங்களுக்கே குடிநீர் வழங்கப்படுகிறது. மதுரை மாநகர் முழுவதும் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்படவில்லை.
மேலும், திமுக-வைச் சேர்ந்த மதுரை மாநகராட்சி மேயர், நிலைக் குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள், திமுக மாமன்ற உறுப்பினர்கள் இணைந்து, முறைகேடான வரி விதிப்பின் மூலம் சுமார் 200 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக, திமுக அரசின் அதிகாரிகளே கண்டறிந்து அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, மதுரை மாநகராட்சி மேயரும், மண்டலக் குழுத் தலைவர்கள் சிலரும் ராஜினாமா செய்ததைத் தவிர, இந்த ஊழலில் திளைத்த மற்றவர்கள் மீது, இதுவரை இந்த திமுக அரசு சட்டப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
எனவே, மதுரை மாநகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளைக் கண்டித்தும்; முறைகேடான வரி விதிப்பில் சுமார் 200 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருப்பது குறித்து முறையான விசாரணை நடைபெறாததைக் கண்டித்தும்; குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை புதுப்பிக்காத, மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்காத மாநகரட்சி நிர்வாகத்தையும்; இதுகுறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாத திமுக அரசையும் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகங்களின் சார்பில் 17.12.2025 புதன் கிழமை காலை 10 மணியளவில், பழங்காநத்தம் ஜெயம் தியேட்டர் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ, எம்.எல்.ஏ. தலைமையிலும்; கழக அமைப்புச் செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளருமான ராஜன் செல்லப்பா, எம்.எல்.ஏ., மதுரை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளரும், மதுரை மேற்கு 5-ஆம் பகுதிக் கழகச் செயலாளரும், மதுரை மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவருமான சோலைராஜா ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகங்களைச் சேர்ந்த, தலைமைக் கழகச் செயலாளர்கள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், மதுரை மாநகராட்சி மாமன்ற இந்நாள், முன்னாள் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட கழக உடன்பிறப்புகள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நிர்வாகத் திறனற்ற திமுக பெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வியாபாரிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Please follow and like us:

You May Also Like

More From Author