திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முருகனை வைத்து அரசியல் செய்யப்படுவதாகக் குற்றம்சாட்டினார். அவர் கூறியதாவது: “முருகன் சைவக் கடவுளா, இந்துக் கடவுளா என்ற விவாதம் தேவையற்றது. முருகன் என் ரத்தம்; என் இனக் கடவுள். சிவனும் முருகனும் இந்துக் கடவுள்களா என்பதைக் குறித்து என்னுடன் விவாதிக்கத் தயாரா?” என்றார்.
அயோத்தியில் ராமர் கோவில் விவகாரம் தற்போது தீர்வு பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் முருகனை முன்வைத்து அரசியல் செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். “முருகனை கும்பிட வேண்டாம் என்று யாராவது மக்களை எதிர்த்தார்களா? அரசியல் செய்ய எதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில் பொறுப்பு இருக்க வேண்டாமா?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “வழிபாடு செய்யும் தெய்வத்தை வைத்து அரசியல் செய்யக் கூடாது,” என வலியுறுத்திய சீமான், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபமேற்றும் விவகாரத்தை முன்னிட்டு திட்டமிட்டு பிரச்சனை உருவாக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார். தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் தமது சொந்தம் போன்றவர்களே என்றும் அவர் தெரிவித்தார்.
