மனிதர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டு பல முயற்சிகளைச் செய்து வரும் எலான் மஸ்க், தற்போது மனித மூளையில் சிப் வைத்து அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரும், உலக கோடீசுவரர்களில் முன்னணியில் உள்ளவருமான எலான் மஸ்க் , நியூராலிங்க் (Neuralink) எனும் நிறுவனத்தை நிறுவியுள்ளார்.
மனித மூளை, நரம்பு மண்டலம், முதுகுத் தண்டுவடம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து உயர் தொழில்நுட்ப ஆராய்ச்சி செய்ய தொடங்கப்பட்டது தான் நியூராலிங்க் நிறுவனம்.
அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாடு நிர்வாகம் கடந்த ஆண்டு நியூராலிங்க் மனிதர்களைக் கொண்டு சோதனை செய்ய அனுமதி வழங்கியது.
இந்நிலையில் தற்போது நியூராலிங்க் நிறுவனத்தின் முதல் முயற்சியாக ஒரு மனிதரின் மூளையில் “சிப் பொருத்துதல்” வெற்றிகரமாக நடந்துள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சோதனை தொடங்கியதாகவும், சிப் பொருத்தப்பட்டிருக்கும் அந்த நபர் உடல்நலன் தேறி வருவதாகவும் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நபரின் முதற்கட்ட மருத்துவ அறிக்கை, அவருடைய நியூரான் ஸ்பைக்குகள் நேர்மறையான அறிகுறிகளைக் காட்டுவதாகவும் எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர், ” நியூராலிங்கின் முதல் தயாரிப்பின் பெயர் டெலிபதி (Telepathy). இந்த டெலிபதி உபகரணமானது எண்ணங்கள் மூலம் தொலைபேசி மற்றும் கணினியை கட்டுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக கை, கால் போன்ற உறுப்புகளை இழந்தவர்களின் பயன்பாட்டுக்காக இந்த உபகரணம் வழங்கப்படும். ஸ்டீபன் ஹாக்கிங்கால் வேகமாகத் தொடர்பு கொள்ள முடிந்திருந்தால் எப்படி இருக்கும். அதை சாத்தியமாக்குவது தான் எங்களின் இலக்கு” என்று மஸ்க் கூறியுள்ளார்.