கேரளாவில் இருந்து ரஷ்யா சென்ற இளைஞர்களின் குடும்பத்தினரை மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி. முரளிதரன் இன்று சந்தித்தார்.
ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் கடந்த 2022 பிப்ரவரியில் தொடங்கியது. இதில் உக்ரைன் ராணுவத்துக்கு ஆதரவாக பல்வேறு நாடுகளை சேர்ந்த தன்னார்வலர்கள், உக்ரைனின் பிராந்திய பாதுகாப்புக்கான சர்வதேச படையில் அங்கம் வகித்து வருகின்றனர்.
இந்நிலையில், ரஷ்ய தரப்பில் இந்தியர்கள் சிலர் எல்லையில் போரிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் உத்தர பிரதேசம், குஜராத், கேராள, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் பகுதியை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் அதிக சம்பளம் தரும் வேலை வாய்ப்பு என்ற ஆசையில் இந்திய இளைஞர்கள், ஏஜென்சிகள் மூலம் ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அங்கு அவர்கள் ராணுவத்தில் சேர வற்புறுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இதை போல் கேரளாவில் இருந்து ரஷ்யா சென்ற சில இளைஞர்களின் குடும்பத்தினரை மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி. முரளிதரன் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார். அவர்களிடம், ரஷ்ய ராணுவத்தில் இருந்து இந்திய இளைஞர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் உறுதி அளித்தார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி. முரளிதரன்
‘ரஷ்யாவின் போர்ச்சூழலில் சிக்கியுள்ள இந்திய இளைஞர்களை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தொடர்ந்து அனைத்து அழுத்தங்களையும் கொடுத்து வருகிறோம். இதனால் அங்கு சிக்கியிருந்த இந்தியர்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர். தற்போது குறைந்தது 20க்கும் மேற்பட்ட இந்தியர்கள் போர் பகுதியில் சிக்கியுள்ளனர் எனத் தெரிவித்தார்.