“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!

Estimated read time 1 min read

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் கூட்டத்தொடரில் சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த மானிய கோரிக்கைகள் மீதான கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

ஒவ்வொரு துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின் பொதும் அந்தந்த துறை அமைச்சர்கள், சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம் சென்று வணங்கிவிட்டு வருவது வழக்கம். அப்போது அவரது சமாதி அலங்கரிக்கப்பட்டு இருக்கும். அதேபோல இன்று இந்து சமய அறநிலையத்துறை மீதான மானிய கோரிக்கை என்பதால் கலைஞர் நினைவிடத்தில் கோபுரம் போன்று அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அங்கு அமைச்சர் சேகர்பாபு தனது ஆதரவாளர்களோடு வந்து மரியாதை செலுத்துவிட்டு பிறகு சட்டப்பேரவை வந்தார்.

கலைஞர் நினைவிடத்தில் கோயில் கோபுரம் போன்று அலங்காரம் செய்யப்பட்டிருப்பது குறித்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிடுகையில், திமுக அமைச்சர்களிடையே, முதலமைச்சர் குடும்பத்துக்கு யார் சிறந்த கொத்தடிமையாக இருப்பது என்ற போட்டியில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தை, கோவில் கோபுரம் போன்று அலங்கரித்து, தொழில் போட்டியில் வரம்பு மீறிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் அமைச்சர் சேகர்பாபு.

கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்கள் என்று கூறிக்கொள்ளும் திமுகவினர், காலகாலமாக இந்து சமய மக்கள் நம்பிக்கைகளைப் புண்படுத்துவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள். பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. தனது தொழில் போட்டிக்கு, இந்து சமய அறநிலையத் துறையைப் பயன்படுத்துவதை அமைச்சர் சேகர்பாபு இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

மறைந்த தனது தலைவர் மீது அத்தனை பாசம் என்றால், அமைச்சர் சேகர்பாபு, தனது வீட்டு பூஜையறையில் அவரது புகைப்படத்தை வைத்து வணங்கட்டும். நாத்திகம் என்ற பெயரில் நாடகமாடி, இந்து மத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதை இனியும் தொடர்ந்தால், மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author