பத்து நாட்களுக்குப் பிறகு குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தென்காசி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளின் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடந்த 16ஆம் தேதி முதல் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இதனிடைய கடந்த 20ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட பெரும் வெள்ளத்தினால் குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவி கரைகள் கடுமையாக சேதம் அடைந்தன. அருவியை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு தடுப்பு கம்பிகளும், தரைத்தளமும் வெள்ளத்தினால் சேதம் அடைந்தது.
இதனால் வெள்ளப்பெருக்கு குறைந்தாலும் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டது. ஐந்தருவி புலி அருவிகளில் வழக்கம் போல் குளிக்க அனுமதிக்கப்பட்டது. கடந்து இரு நாட்களாக மெயின் அருவி கரையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த பணிகள் நிறைவடைந்ததால் தற்போது அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பழைய குற்றால அருவியில் சீரமைப்பு பணிகள் நிறைவு பெறாததால் அங்கு குளிக்க இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை.
