தனக்கு எம்பி பதவி வேண்டாம் என்பதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களை மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் மாநிலங்களவை உறுப்பினர்கள் நேரடியாக தேர்வு செய்ய முடியாது. ஆனால் மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களை வைத்து அவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதன்படி தமிழ்நாட்டி பொறுத்தவரையில் தற்போது எம்பியாகவுள்ள 6 பேரின் பதவிக்காலம் விரைவில் நிறைவடைகிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக எம்.பிக்கள், வில்சன், எம்.சண்முகம், முகமது அப்துல்லா, அதிமுக MP சந்திரசேகரன் உள்ளிட்ட 6 பேரின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதனையடுத்து ஜூன் 19ம் தேதி தேர்தல் நடத்தப்படவுள்ளது.
இந்நிலையில் தனக்கு எம்பி பதவி வேண்டாம் என்பதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் தலைவராக மாநில அரசியலில் தீவிரம் காட்ட அன்புமணி ராமதாஸ் முடிவு செய்துள்ளார்.
தந்தை ராமதாஸ் உடனான மோதல் நீண்டுவருவதால் மாநில அரசியலே முக்கியம் என அன்புமணி முடிவெடுத்துள்ளார். இந்த முறை அன்புமணிக்காக ராஜ்யசபா சீட் கேட்க வேண்டாம் என பாமக எண்ணுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜ்யசபா சீட் கேட்டால் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி பேர வலிமையை குறைக்கும் என பாமக இம்முடிவை எடுத்துள்ளது. டெல்லி அரசியலை பாமக தலைமைக்கு நம்பிக்கைக்குரிய வேறு ஒருவரிடம் அளிக்கவும் முடிவு செய்துள்ளது. இதனிடையே பாமக யாருடன் கூட்டணி என்பதும் இன்னும் முடிவாகவில்லை.