டெல்லி உலக புத்தகக் கண்காட்சியில், தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் வெளியீட்டுப் பிரிவின் சார்பில், ‘இந்தியா இயர் புக் 2024’ மற்றும் ‘கேரியர் காலிங்’ ஆகிய 2 புத்தகங்களை தகவல் ஒலிபரப்புத் துறைச் செயலாளர் வெளியிட்டார்.
டெல்லி பிரகதி மைதானத்தில் நேற்று உலகப் புத்தகக் கண்காட்சி தொடங்கியது. இதில், ‘இந்தியா இயர் புக் 2024’ மற்றும் கேரியர் காலிங் என்ற 2 புத்தகங்களை தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் சஞ்சய் ஜாஜு வெளியிட்டார்.
‘இந்தியா இயர் புக் 2024’ என்பது இந்தியாவின் முன்னேற்றத்தை எடுத்துக்காட்டும், ஒரு தொகுப்பாகும். இது நாட்டின் வளர்ச்சியுடன் பயணிக்கும் ஆர்வமுள்ளவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் ஆகும்.
அத்துறையின் மற்றுமொரு வெளியீடான கேரியர் காலிங் என்பது மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதலை வழங்கும் வேலைவாய்ப்பு செய்திகள் என்ற வார இதழில் அண்மைக்காலமாக வெளியிடப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாகும். இன்றைய போட்டி சூழலில் போட்டித் தேர்வுகள் தொடர்பாகவும் அவற்றின் முக்கியத்துவத்தையும் இந்த நூல் எடுத்துரைக்கிறது.
இந்த வெளியீடுகளைத் தாண்டி, வெளியீட்டுப் பிரிவின் அரங்கில் பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கிய நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. காந்திய இலக்கியம், ‘நவீன இந்தியாவை உருவாக்கியவர்கள்’, கலை, கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் குழந்தைகள் இலக்கியம் குறித்த பல்வேறு நூல்கள் உள்ளன. பல்வேறு இந்திய மொழிகளில் வெளியிடப்பட்ட வெளியீடுகளும் இங்கு கிடைக்கின்றன.