மானுடக் கதைகளை மனதுக்கு நெருக்கமாகச் சொன்ன கி.ரா!

Estimated read time 1 min read
தமிழ் இலக்கிய உலகில் நீங்கா இடம்பிடித்தவர்கள் பட்டியல் ஒன்றை தயார் செய்தால் அதில் முதல் சில இடங்களில் நிச்சயம் கி.ரா என்று அன்போடு அழைக்கப்படும் கி.ராஜநாராயணனின் பெயர் இடம்பெறும்.

கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கபடும் கி.ரா எளிய மனிதர்களின், கிராம மக்களின் வாழ்வியலை அதன் ஆழத்துடனும் உயிர் துடிப்புடனும் இலக்கியமாக படைத்தவர்.
மனிதர்களை தாண்டியும் மண்ணில் உள்ள அத்துனை ஜீவ ராசிகளுடனும் நம்மை பேச வைக்கும் ஆற்றல் கொண்டது அவரது எழுத்து. ஏன் தாவரங்களிடம் கூட..
கி.ராவின் எழுத்துக்களை படிக்கும் ஒருவர் அவர் உருவாக்கி வைத்துள்ள உலகில் நிச்சயம் கரைந்துபோகக் கூடும்.
ஒடிசலான தேகம். உள்ளதை உள்ளபடி போட்டுடைக்கும் பேச்சு. உணர்வை சுமந்து வரும் எழுத்து. இதுதான் கி.ரா. ‘கரிசல் இலக்கியத்தின் தந்தை’ என்றழைக்கப்பட்ட கி.ராஜநாராயணன் பிறந்ததும் அதே கரிசல் மண்ணில்தான்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்த இடைச்செவல் கிராமத்தில் 1922ஆம் ஆண்டு பிறந்தார் கி.ரா.
அவரது இயற்பெயர் ராயங்கல ஸ்ரீ கிருஷ்ணராஜ நாராயண பெருமாள் ராமானுஜம். ஏழாம் வகுப்பு வரை படித்துவிட்டு விவசாயம் பார்த்து வந்த கி.ரா. பின்னர் எழுத்தாளராக மாறினார்.
அவர் எழுதிய ‘மாயமான்’ என்ற சிறுகதை 1958ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. குறுநாவல், நாவல், சிறுகதை, கிராமியக்கதை, கடிதம் என இலக்கியத்தின் பலதளங்களில் இயங்கியவர்.
‘கரிசல் கதைகள்’, ‘கொத்தைப்பருத்தி’, ‘கோபல்ல கிராமம்’ போன்றவை கி.ரா.வின் முக்கியப் படைப்புகள். ‘கோபல்லபுரத்து மக்கள்’ நாவலுக்காக 1991ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.
உ.வே.சா. விருது, இலக்கியச் சிந்தனை விருது, தமிழக அரசு விருது, தமிழ் இலக்கியச் சாதனை விருது உள்ளிட்டவற்றையும் பெற்றுள்ளார்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சிறப்பு பேராசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். ‘வட்டார இலக்கியத்தின் முன்னத்தி ஏர்’, ‘தமிழ் எழுத்துலகின் பீஷ்மர்’ எனப்போற்றப்பட்ட கி.ரா. தள்ளாத வயதிலும் தளராமல் எழுதியவர்.
ஒரே மூச்சில் ஒரு கதையை எழுதி முடிக்கும் வழக்கம் எனக்கில்லை, எழுதியதைப் படித்து அதை மீண்டும் மீண்டும் அடித்துத் திருத்தி எழுதுவேன் என்பார். முன்பெல்லாம் நண்பர்களுக்கு நீண்ட கடிதம் எழுதும் வழக்கம் கொண்ட கி.ரா.
அவர்களது பதில் கடிதங்களை பாதுகாத்து வைப்பாராம். ஆனால் தற்போது கடிதத்துக்கான தேவை இல்லாமல் போய்விட்டது என்றார்.
கி.ரா.வின் ‘கிடை’ என்ற குறுநாவல் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. இவைதவிர அவரது எழுத்துகளில் பல அனுமதியின்றியே வெள்ளத்திரையில் வெளிவந்திருக்கின்றன. ஆனால் அதைப்பற்றியெல்லாம் கி.ரா. கவலைப்பட்டதே இல்லை.
“இல்லேன்னு தானே என்கிட்ட இருந்து எடுக்குறாங்க, எடுத்துக்கட்டும் விடுங்கன்னு” விட்டுக்கொடுக்கும் எழுத்துலக அட்சயபாத்திரம். நல்ல இசை ஞானம் கொண்டவர் கி.ரா. வயலின் இசைக்கக் கற்றவர்.
கி.ராவின் எழுத்துக்களில் கிடை நாவல் கிராமங்களில் உள்ள கீதாரிகளின் வாழ்வை அப்படியே சித்தரித்திருந்தார். 64 பக்கங்களைக் கொண்ட இந்த குறுநாவலில் கீதாரிகளின் ஒட்டு மொத்த வாழ்வும் அதில் அடங்கியது. மேய்ச்சலுக்குன் செல்ல இருக்கும் நேரத்தில் தனது பருத்தியை ஆடுகள் மேய்ந்துவிட்டது என கூறி கிடையை ஒரு பெண் மறித்தி நிறுத்துகிறார்.
பருத்தியில் ஆடுகளை மேய்க்க விட்டது யார் என்பதை கண்டுபிடிப்பது நாவலின் கரு. இடையிடையே கதைமாந்தர்களை விவரிக்கும் பகுதி என அனைத்தும் அட்டகாசமாக அமைந்திருக்கும். இந்நாவல் பின்னாட்களில் ஒருத்தி என்ற பெயரில் திரைப்படமானது.
கோபல்ல கிராமம். ஆந்திர தேசத்தில் இருந்து மக்கள் தமிழ்நாடு வந்த கதை. வரும்போது அவர்கள் பட்ட இன்னல்களை சொல்லும் கதை. இங்கு வந்து அவர்கள் தங்களுக்கான ஊர்களை அமைத்துக் கொண்ட கதை.
படிக்கத் திகட்டாத ஒரு கதை. கிராமங்கள் அமைத்து வாழத் தொடங்கிய மக்கள், குடும்பங்கள் பெருகிய நிலையில் அவர்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகளைப் பேசும் நாவல் இது.
கரிசல் கிராமங்களின் சொலவடைகள், இடையிடையே வரும் தெலுங்கு வசனங்கள் என மக்களின் வாழ்முறை அப்பட்டமாக சித்தரிக்கப்பட்டிருக்கும்.
இந்நாவலில் ஓரிடத்தில் ஒருவரால் குளத்தில் மூழ்கடிக்கப்படும் பெண் மூழ்கடித்தவனது கட்டை விரலை கடித்து துண்டாக்கி விடுவார். முதல் மரியாதை திரைப்படத்தில் இக்காட்சி படமாக்கப்பட்டிருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கரிசல் காட்டுக் கடுதாசி. பிரபல இதழில் தொடராக வெளிவந்தது. கொஞ்சம் கதை மற்றவை அனைத்தும் நடந்ததையும் கண்டதையும் எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளார் கி.ரா.
இதில் வரும் குடை குறித்த ஒரு பகுதி, கடைக்கார நண்பர் உயிரிழக்கும் இடம் என ஒவ்வொரு பகுதியும் மனதிற்குள் அப்படியே ஒட்டும். எழுத்துகளால் ஆன வார்த்தைகளை மென்மையாக தந்தவர் கிரா. அதை இந்த தொகுப்பில் உணரலாம்.
இது தவிர கதவு, பிற கட்டுரைத் தொகுப்புகள், சிறு கதைத் தொகுப்புகள், குறு நாவல்கள் என அனைத்தும் ஒவ்வொரு ரசனையைச் சார்ந்தது.
கிரா அதிகம் படிக்கவில்லை என்றாலும் மக்களையும் அவர்களது வாழ்வியலையும் படிக்கத்தெரிந்தவர். அதை எழுத்தில் பாமர மக்களுக்கும் புரியும் வண்ணம் கொண்டு வரத் தெரிந்தவர்.
1958 ஆம் ஆண்டு சரஸ்வதியில் தனது முதல் கதையை எழுதியவர். 1991 ஆம் ஆண்டு அவரது இரண்டாவது நாவலான கோபல்ல புரத்து மக்கள் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர். 2021 மே 17-ல் மறைந்தார்.
எளிய மக்களிம் மானுடத்தை எளிமையாக மக்களது மொழிகளில் சொன்னவரது கதைகளை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டியதும் இன்றியமையாத ஒன்றே.

– நன்றி: புதிய தலைமுறை

Please follow and like us:

You May Also Like

More From Author