தமிழகத்தில் மீன்பிடி துறைமுகங்கள் உருவாக்கிட 1,464 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
தமிழகத்தின் நுழைவுவாயிலாக, கும்மிடிப்பூண்டி தொகுதி உள்ளது. கும்மிடிப்பூண்டி தொகுதியின் கடற்கரையோர கிராமங்களில் மீனவ சமுதாய மக்கள் பெருமளவில் வசிக்கிறார்கள். மீனவ சமூக மக்களை, இதற்கு முன்பு இருந்த ஆட்சியாளர்கள் வெறும் வாக்கு வங்கிகளாக மட்டுமே பார்த்தனர். ஆனால், நம் பாரதப் பிரதமர் மோடி அவர்கள், மீனவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த தனி அமைச்சகம் அமைத்தார்.
மீனவ சமுதாயத்துக்கென பல திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார்.
பிரதம மந்திரி மத்ஸ்ய சம்பதா திட்டம் மூலம், தமிழகத்துக்கு 2021 முதல் 2023 வரை ரூ.617 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மீனவ உள்கட்டமைப்பு நிதி மற்றும் மத்ஸ்ய சம்பதா திட்டம் ஆகியவற்றிற்கு இதுவரை ரூ.1,356 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் மூலம், தமிழகத்தில் இதுவரை 1,84,457 மீனவர்கள் பயன் அடைந்துள்ளனர். மேலும், தமிழகத்தில் மீன்பிடி துறைமுகங்கள் உருவாக்கிட 1,464 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1,42,458 மீனவர்களுக்கு, கிசான் கடன் அட்டை வழங்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு, மீன் விவசாயிகள் என்று பெயரிட்டு, விவசாயிகளுக்குக் கிடைக்கும் அனைத்து நலத்திட்டங்களையும் மீனவர்களுக்கும் கிடைக்கச் செய்திருக்கிறார்.
கும்மிடிப்பூண்டி தொகுதியின் முக்கிய பிரச்சினை சிப்காட்டில் செயல்படும் டயர் மற்றும் இதர தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் மாசு மற்றும் நச்சுக் கழிவுகள் தான். இதனால் இப்பகுதியின் தண்ணீர் மற்றும் காற்று மிகவும் மாசுபட்டு இருக்கிறது.
பொதுமக்கள் பலமுறை முறையிட்டும் இதற்கான ஒரு தீர்வையும், இத்தனை ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள் ஏற்படுத்தவில்லை. சில தினங்களுக்கு முன்பு, ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் பேசும்போது, அங்குள்ள குரோமியம் கழிவுகளை, கடந்த 28 ஆண்டுகளாக எடுக்காமல் இருப்பதை கண்டித்து பேசினோம்.
உடனடியாக, நேற்று அமைச்சர் சிவ.மெய்யநாதன் குரோமியம் கழிவுகளை நீக்க 15 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும், விரைவில் பணிகள் துவங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 28 ஆண்டுகளாக மக்கள் அவதிக்குள்ளானது தெரியாமல் இவர்கள் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கும்மிடிப்பூண்டி பிரச்சினைக்கும் மாசுக் கட்டுப்பாடு வாரியம் சரியான நடவடிக்கை வேண்டும்.
மக்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் எந்தச் சமரசமும் இருக்கக் கூடாது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டத்தில், ஒரு Knowledge park கட்டுவதற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு அரசாணையை வெளியிட்டது திமுக அரசு. இந்த அரசாணையின்படி கல்பட்டு, ஏனம்பாக்கம், மேல்மாளிகைப்பட்டு, செங்கதாக்குளம், எர்ணாகுக்குளம் மற்றும் வெங்கல் ஆகிய கிராமங்களில் இருந்து சுமார் 1,200 ஏக்கர் விவசாய நிலங்களைக் கையகப்படுத்தி, Knowledge Park கட்டப் போவதாக அறிவித்துள்ளார்கள்.
இதனால், இந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும். ஆனால், மக்களைப் பற்றி திமுக அரசுக்கு எந்தக் கவலையும் இல்லை.
இவர்கள் கையகப்படுத்த நினைக்கும் இடத்திற்கு அருகிலேயே, 500 ஏக்கர் பரப்பில் தரிசு நிலம் இருக்கிறது.
ஆனால், விவசாய நிலத்தை அழிப்பதிலேயே திமுக அரசு குறியாக இருக்கிறது. விவசாய நிலங்களை அழித்துக் கட்டப்படும் அந்த knowledge Parkல், விவசாயம் சம்பந்தமாக ஆராய்ச்சி செய்யப் போகிறார்களாம். இதுதான் திராவிட மாடலின் லட்சணம். இது போன்ற விவசாய விரோதப் போக்கை, திமுக உடனடியாக நிறுத்திக் கொள்ளவேண்டும்.
நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆட்சியில், தமிழகத்திற்கு 9 ஆண்டுகளில் கிடைக்கப்பெற்ற நிதி மற்றும் திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.10.76 லட்சம் கோடி. திருவள்ளூர் மாவட்டத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.4,414 கோடி. புதிய 11 மருத்துவ கல்லூரிகளில் ஒன்று திருவள்ளூருக்கு வழங்கப்பட்டுள்ளது.
71,532 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடு, 4,61,655 வீடுகளில் குழாய் மூலம் குடிநீர், 1,91,890 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 1,13,124 பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 14,621 பேருக்கு, 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு, 72,851 விவசாயிகளுக்கு, பிரதமரின் கிசான் சம்மான் நிதியின் மூலமாக வருடம் 6000 ரூபாய், திருவள்ளூர் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட முத்ரா கடன் 6,228 கோடி ரூபாய் என மத்திய அரசு வழங்கியுள்ள திட்டங்கள் மூலம் பல லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர்.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நல்லாட்சி தொடர, தமிழகத்தில் நேர்மையான அரசியல் மாற்றம் உருவாக, ஊழல், குடும்ப அரசியல் அகற்றப்பட, தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நமது பிரதமர் கரங்களை வலுப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.