உத்தரகண்ட் மாநிலத்தில் விரைவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறியிருக்கிறார்.
உத்தரகண்ட் மாநில அரசு வரும் பிப்ரவரி 5 முதல் 8-ம் தேதி வரை 4 நாள்களுக்கு சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை கூட்டி இருக்கிறது. இக்கூட்டத் தொடரில் பொது சிவில் சட்ட மசோதாவை நிறைவேற்ற முடிவு செய்திருக்கிறது. இம்மசோதா நிறைவேறிய பிறகு உடனடியாக சட்டப்பேரவை ஒத்திவைக்கப்படும் என்று தெரிகிறது.
இந்த நிலையில், இதை உறுதிப்படுத்தும் வகையில், மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அப்பதிவில் “மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் எங்கள் அரசு எப்போதும் உறுதியுடன் இருக்கிறது.
வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பொது சிவில் சட்ட மசோதாவை நிறைவேற்றுவதன் மூலம், மாநிலத்தில் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம்.
மேலும், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு பிப்ரவரி 2-ம் தேதி மாநில அரசிடம் தனது வரைவைச் சமர்ப்பிக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.