நீண்ட தூரத்தில் இருந்து வரும் நண்பர்களைச் சந்திப்பது மகிழ்ச்சியானது. இந்த வாக்கியம் கன்ஃபியூசியஸின் கருத்துகள் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
2,500 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த இந்தப் புத்தகத்தில் சீனத் தத்துவஞானியான கன்ஃபியூசியஸ் மற்றும் அவரது சீடர்களின் கருத்துகள் மற்றும் செயல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கன்ஃபியூசியஸ் மற்றும் கன்ஃபியூசியன் கலாசாரம் பிறந்த இடமான கிழக்கு சீனாவின் ஷாந்தோங் மாநிலத்தின் ச்சுஃபு என்ற இடத்திற்கு வரக்கூடிய அனைவரும் கன்ஃபியூசியஸ் தத்துவத்தின் சுவடுகளைத் தேடுவர்.
தற்போதைய சீன மக்களின் சிந்தனை, நடத்தை ஆகியவற்றில் கன்ஃபியூசியஸின் போதனைகள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. அதற்கு, நல்ல பண்புகளுடன் கூடிய ஆட்சிமுறை, சுய முன்னேற்றத்துக்கு இடைவிடாமல் பாடுபடுவது ஆகியவற்றை எடுத்துக்காட்டாகக் கூறலாம். இந்த தொன்மையான விஷயங்கள் சீன மக்களிடையேயும், அவர்களின் வாழ்க்கை முறையிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் கருதுகிறேன் என்று கன்ஃபியூசியசின் 76ஆவது தலைமுறையைச் சேர்ந்த கொங் சின்ஃபெங் தெரிவித்தார்.
சீன நாகரிகத்தின் தொடர்ச்சியை இடம் மற்றும் காலம் சார்ந்த கூறுகளில் இருந்து புரிந்து கொள்ள முடியும். வெவ்வேறு கண்ணோட்டங்கள் மற்றும் எல்லைகள், உலகைப் பற்றிய வெவ்வேறு புரிதல்களுக்கு வழிவகுக்கின்றன.
சீனாவின் நீண்டகால வரலாறு மற்றும் தொடர்ச்சியைப் புறக்கணித்தால், சீனாவின் எதிர்காலம் ஒருபுறம் இருக்கட்டும், அதன் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையுமே நம்மால் புரிந்து கொள்ள இயலாது. சமகால சீனா, அதன் கடந்த காலத்தின் தொடர்ச்சியாகவும் வளர்ச்சியாகவும் உள்ளது.
சீன நாகரிகத்தின் தொடர்ச்சியைப் புரிந்துகொள்வது, உண்மையான சீனாவைப் புரிந்துகொள்வதற்கான முதல் படியாகும் என்று கொங் சின்ஃபெங் சுட்டுக்காட்டினார்.