சென்னை : நடிகை மீனாவுக்கு தமிழக பாஜக மூலம் முக்கிய பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா, அரசியல் பயணத்தில் இணையவிருப்பதாகவும், பாஜகவில் மாநில அளவிலான பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இதற்கு முன்னோடியாக, அவர் துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்து, அவருடனான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பு, அவரது அரசியல் நுழைவுக்கு முக்கிய படியாக பார்க்கப்படுகிறது.
தமிழக பாஜகவில் புதிதாக நான்கு பொதுச் செயலாளர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும், இதில் மீனாவுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து, மாநில அளவிலான 28 பதவிகளுக்கான பட்டியல் குறித்து ஆலோசித்ததாகவும், இதில் மீனாவுக்கு பொறுப்பு உறுதியாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே, நடிகை குஷ்பு உள்ளிட்ட மீனாவின் சக நடிகைகள் பாஜகவில் முக்கிய பதவிகளில் இருப்பது, மீனாவின் அரசியல் நுழைவுக்கு உறுதுணையாக இருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மீனாவின் அரசியல் ஆர்வம் புதிதல்ல என்றாலும், இது தொடர்பாக அவர் இந்த விஷயம் குறித்து இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
கடந்த 2024-ஆம் ஆண்டு மத்திய அமைச்சர் எல்.முருகனின் இல்லத்தில் நடந்த பொங்கல் விழாவில் பிரதமர் மோடியுடன் மீனா பங்கேற்றது, மற்றும்,நடன இயக்குநர் கலா மாஸ்டருடனான நெருங்கிய நட்பும், பாஜகவில் இணைய அவரை ஊக்கப்படுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தமிழக பாஜக தரப்பில் இருந்து இதுதொடர்பான உறுதியான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதே சமயம், இந்த தகவல் உண்மை இல்லை என்றால் மீனாவே இது குறித்து அதிகாரப்பூர்வமாக விளக்கமும் அளிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.