சைபர் மோசடிகளில் மியூல் வங்கிக் கணக்குகள் பயன்படுத்தப்பட்டதாக 42 இடங்களில் சிபிஐ நாடு தழுவிய சோதனைகளைத் தொடங்கியது.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சிபிஐ, ஆப்ரேஷன் சக்ரா-வி நடவடிக்கையின் கீழ் ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, உத்தரகாண்ட் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மியூல் வங்கிக் கணக்குகள் தொடர்பாக ஒருங்கிணைந்த சோதனைகளைத் தொடங்கியதாகத் தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் பல்வேறு வங்கிகளின் 700-க்கும் மேற்பட்ட கிளைகளில் சுமார் எட்டரை லட்சம் மியூல் கணக்குகள் உள்ளதாகவும் சிபிஐ கூறியுள்ளது.
மியூல் வங்கிக் கணக்குகளை சைபர் மோசடிகளுக்குப் பயன்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரைக் கைது செய்ததாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது.
மியூல் வங்கிக் கணக்கு என்பது சைபர் குற்றவாளிகள், மற்றவர்களின் பெயரில் வங்கிக் கணக்குகளைத் தொடங்கி அதன் மூலம் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளப் பயன்படுத்தும் ஒரு உத்தியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.