சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீயும், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கான உயர் நிலை பிரதிநிதி காஜா கல்லாஸ் அம்மையாரும் ஜூலை 2ஆம் நாள் பிரசல்ஸில் 13ஆவது சீன-ஐரோப்பிய உயர்நிலை நெடுநோக்கு பேச்சுவார்த்தையை கூட்டாக நடத்தினர்.
அப்போது வாங்யீ கூறுகையில், இவ்வாண்டு சீன-ஐரோப்பிய ஒன்றியத் தூதாண்மையுறவு உருவாக்கப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவாகவும், ஐ.நா உருவாக்கப்பட்ட 80ஆவது ஆண்டு நிறைவாகவும் உள்ளது. சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் பரிமாற்றத்தை வலுப்படுத்தி, புரிந்துணர்வை ஆழமாக்கி, ஒன்றுக்கொன்று நம்பிக்கையை அதிகரித்து, ஒத்துழைப்புகளை முன்னேற்றி, இரண்டாவது உலகப் போருக்குப் பிந்தைய சர்வதேச ஒழுங்கைக் கூட்டாகப் பேணிக்காக்க வேண்டும் என்றார். மேலும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இரு தரப்புத் தலைவர்களின் புதிய சந்திப்பை நடத்தி, ஆக்கப்பூர்வமான சாதனைகளைப் பெறுவதை முன்னேற்ற சீனா விரும்புவதாகவும் தெரிவித்தார்.
தவிரவும், பன்முக நெடுநோக்கு கூட்டாளிகளான சீனாவும், ஐரோப்பிய ஒன்றியமும், ஒன்றுக்கொன்று மதிப்பளித்து, தத்தமது மைய நலன்களைக் கவனிப்பது முக்கியமானது. ஐரோப்பிய ஒன்றியம் உண்மையான செயல்களின் மூலம் சீனாவின் மைய நலன்களுக்கு மதிப்பளித்து, ஒரே சீனா என்ற கோட்பாட்டைப் பின்பற்ற வேண்டும் என்றும் வாங்யீ வலியுறுத்தினார்.
கல்லாஸ் கூறுகையில், ஒரே சீனா என்ற கோட்பாட்டில் ஐரோப்பிய ஒன்றியம் ஊன்றி நின்று, சீனாவுடன் இணைந்து இரு தரப்புத் தலைவர்களின் புதிய சந்திப்பிற்குச் செவ்வனே ஆயத்தம் செய்து, மனம் திறந்த தொடர்புகளின் மூலம் ஒன்றுக்கொன்று புரிந்துணர்வை அதிகரிக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.