பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) கடந்த சில மாதங்களாக உட்கட்சி குழப்பங்கள் அதிகரித்து வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, கட்சியின் தலைவர் மற்றும் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று (ஜூலை 20) ஒரு முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில், சட்டமன்ற உறுப்பினர்கள் சிவக்குமார், சதாசிவம் மற்றும் வெங்கடேசன் ஆகிய மூவர், கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி தன்னிச்சையான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தகவல்களை பாமகவின் கௌரவ தலைவர் ஜிகே மணி தலைமையிலான குழு தலைமையிடம் அறிவித்திருந்தது. இதையடுத்து, கட்சி நிர்வாகக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டபோது, மூன்று எம்.எல்.ஏ.க்களும் கட்சியின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதற்காக அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை தேவை என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, தற்போது மூவரும் தற்காலிகமாக கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், முழுமையான விசாரணை நடத்தப்படும் வரை, அவர்கள் கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என்றும், விசாரணைக்காக அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, நேரில் ஆஜராக வேண்டிய தேதியும் அறிவிக்கப்பட உள்ளது.
கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதற்கான காரணங்களை விளக்குமாறு கேட்டு, விசாரணையின் முழு அதிகாரமும் தலைவர் ராமதாஸிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையால் பாமகவில் உள்ள உட்கட்சி பதற்றம் மேலும் வெளிப்படையாகி இருக்கிறது. மூன்று எம்.எல்.ஏ.க்களையும் கட்சி விதிகளை மீறியதற்காக இடைநீக்கம் செய்தது கட்சியின் வரலாற்றில் முக்கியமான திருப்பமாகக் கருதப்படுகிறது. எதிர்வரும் நாட்களில் இந்த நடவடிக்கை பாமகவின் கூட்டணித் தொடர்புகளுக்கும், எதிர்கால அரசியல் நிலைப்பாட்டுக்கும் பெரிய தாக்கம் ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது